அற்புதங்கள் நடக்குமென்று காத்திருந்தோம்.
அடிக்கடி நாம் எதிர்பார்த்துத் தோற்றுப் போனோம்.
அற்புதங்கள் அதிசயங்கள் எவையும் நம்மை
அணுகவில்லை…
எதும் நடந்து விடியவில்லை.
அற்புதங்கள் செய்வார்கள் என்று நாங்கள்
ஆண்டவர்கள் அனைவரையும் நம்பிக் கெட்டோம்.
அற்புதங்கள் அதிசயங்கள் காக்க வில்லை.
அழிந்தவைகள் அழிந்ததுதான் மீள வில்லை!
அற்புதங்கள் நிகழ்த்தவல்ல கடவுள் மாரும்
அருள் கூடி நிஷ்டையிலே அமர்ந்து கொண்டார் .
அற்புதர்கள் என அவர்கள் அனுப்பி வைத்தோர்
அற்பர்களாய் இலாபநட்டக் கணக்குப் பார்த்தார்.
அற்புதங்கள் நிகழாமற் பார்த்துக் கொண்ட
ஆற்றல் மிகு சாத்தான்கள் வாகை சூட
அற்புதங்கள் நிகழுமென ஏங்கிக் காத்தோர்
அழிந்துலைந்தார்… அவரை எவர் மீட்டுப் பார்த்தார்?
“அழிந்து வெந்த வரலாறே மண்ணில் வந்த
அற்புதமாம்” எனச் சாத்தான் வேதம் ஓதும்.
விழிமூடிக் கிடந்த தெய்வம் எல்லாம் ஏதோ
விடுகதைகள் போட்டவிழ்த்து எம்மை ஏய்க்கும்.
பழியோடு பலியோடு முடிந்த பாவப்
பட்ட மரமான நிலம், கொழுகொம் பற்று
வெளிறும் இளம் கொடிகள், வாடும் வயல்கள் மிஞ்சும்!
விரக்தி இன்றும் அற்புதங்கள் தேடிக் கெஞ்சும்!