“ஈழத் தமிழரின் ஈடில் அடையாளம்
யாழின் தமிழ்சைவ யௌவனமும் –யாதென்றால்
நல்லூர் பெருவிழாவாம்”…நாடுரைக்கும்! அவ்விழாவின்
எல்லைக் குவமைவேறு ஏது?
இருபத்து ஐந்து எழில்நாட்கள் ஆண்டில்
வரம்பெற்ற நாட்கள் வணங்கி–அருள்நிதியம்
கொள்வோம் குறைகளைவோம் கொஞ்சவரும் நல்லூரான்
தள்ளான் தருவான் தனம்.
ஞானத் திருவுருவாய் நல்லூர்ப் பதியுறையும்
வேலவனின் வாசலிலே வீழ்ந்தெழுந்து –ஈனம்
துடைப்போம் துடக்கறுப்போம் தூய மனத்தை
அடைவோம் பெறுவோம் அறிவு.
அலங்காரக் கந்தன் அழகொழுகும் வேலன்
கலங்கித் தெளியாக் கவலை–நிலைகுலைக்கும்
நாட்டுயிர்ப்பை மீட்பான் நமதுவீட்டை யும்பார்ப்பான்
வாட்டும் துயர்கள் வடித்து.
நல்லூரின் வேலன் நமதயலோன் நல்நண்பன்
வல்லோன் வரலாற்றை வாழவைப்போன் –எல்லைகள்
இல்லான்; எழிலுருவில் இங்கு நடமிடுவோன்.
எல்லாம் அவனே எனக்கு.
கூடிவரும் துன்பம் குலவவரும் தீமைகள்
தானென் றகங்காரத் தன்முனைப்புப்–பேதமைகள்
என்னை மிரட்டும் எனைப்பழிக்கும் என்மனமோ
அன்னவனை நம்பிவெல்லும் ஆம்.
என்னைத் தடம்மாற்ற எத்தனிக்கும் மும்மலங்கள்
என்கின்ற சூரர்கள் என்றுமெனைப்–பின்தொடர்வர்!
வேலெடுத்து வீசுவேலா வீழ்ந்தவர்கள் போகையில்யான்
பாவிசைப்பேன் சேர்ந்துநீ பாடு.
என்னுடைய வெற்றிதோல்வி என்னுடைய நன்மைதீமை
என்னுடைய இன்பதுன்பம் எல்லாமும் –உன்செயலே
என்றறிவேன் எங்கெங்கோ போனேன் எனைச்சரியாய்
உன்திசைசேர்க் கும்உன் ஒளி
நான்கேட்ப தெல்லாமும் நல்காய் “அருள்”என்று
நான்கேட்கா நன்மைபல நல்கிடுவாய் –ஆண்டியக்கும்
எல்லாம் உனதருளே என்றிருப்பேன் மோதவரும்
பொல்லாப்பு எல்லாம் பொசுக்கு.
உன்னருகில் உன்னடியில் உன்பணிகள் செய்வதற்கு
என்னைத் தெரிந்து இயக்குகிறாய் –உன்கருணை
ஒன்றால் ஒளிர்கின்ற ஒன்றுமிலா என்னைஅணை!
உன்புகழால் என்னை உயர்த்து.
கோடி செலவழித்துக் கொட்டவில்லை! நேர்த்தியென்று
ஆடி உருளவில்லை அன்பொன்றைத் —தேடித்
தருமென்னை வாழ்த்தித் தலைநிமிர வைத்தாய்
வரந்தருவாய் நித்தம் மதித்து.
நீயன்றி யாரும் நிழல்,துணைகள் இல்லையென்று
வாழும் மனம்திடமாய் மாறுதற்கு–ஊக்கமருள்
என்பிழைகள் போக்கு எனதுகுறை சாய்த்து
என்னை உணர்த்து எனக்கு.