பிரச்சனைத் தெருநாய்

பிரச்சனைத் தெருநாய்
பெரிதாய்க் குலைத்துத்
துரத்தும் தினம்;
நாமும் துணுக்குற்று அது கலைக்க…
மருண்டு, இதயம் படபடக்கவே மாய்ந்து,
பயந்தோடக் கண்டால்….
பாய்ந்து வேகம் அது கொள்ளும்!
உயிர்ப்பயம் எமக்குளதை உணர்ந்தால்
அதன் வேகம்
அதிகமாகித் தாவிக் கடிக்க அதுசீறும்!
பிரச்சனைத் தெருநாய்
பின்னால் கலைத்து வர
வெருளும் குணம் விட்டு,
பயத்தை வெளிக் காட்டாது,
ஓடாது,
கலைக்கும் நாய் முன் ஓர் கணம் தரித்தால்…
பாய்ந்து வரும் நாய் மருளும்!
வேகத்தினைக் குறைக்கும்!
யோசிக்கும்!
கண்களிலே அச்சம் எழ அது பம்மும்!
நின்ற நாம்…. நாயை நோக்கி
நிமிடத்திலே திரும்ப….
பின்னங்கால் பிடரி பட
பின்வாங்கி அது ஓடும்!
நிற்போம்…
பிரச்சனைத் தெரு நாய்க்கு முகம் கொடுத்து!
அற்புதங்கள் தேவையில்லை….
அஞ்சாத் துணிவோடு
நிற்போம்;
பிரச்சனை நாய் எமைநீங்கிப் போவதற்கு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply