மனிதம்

மனிதர்கள் வாழ்கிறார்கள் மனிதத் தன்மை
வாழ்கிறதா அவர்களிடை? பிறந்தோ ரெல்லாம்
“புனிதர்கள் தாம்” என்று புசத்திக் கொண்டு
பொல்லாங்கே புரிகின்றார் மற்ற வர்க்கு!
இனம் சாதி மதம் என்றும் தங்க ளுக்குள்
இவன் சிறியோன் அவன் பெரியோன் என்றும் கொண்டு
மனங்களில் பேய் வளர்த்து; வெளியே தேவ
வகையென்று வாழ்பவரே அநேகர் இன்று!

ஆணவத்தின் தீ நெஞ்சுள் கொழுந்து விட்டு
அன்புதனை அவித்து பிறரோடு மோத
நாணம் வெட்கம் ஏதுமற்று சுயந லத்தை
நாட்ட நாக்கில் நீர் வழிய அலையும் மாக்கள்
பூண்டிருப்பார் பலவேடம்! விசத்தைப் பூசிப்
புன்னகைப்பார் பலநேரம்! இவர்கட் குள்ளே
காணுவமா மனிதமுள்ள மனிதர் தம்மை?
கடவுளரும் தேடுகிறார் அவர்க்குள் தம்மை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply