நல்லூர் கொடியேறின் நாடொளிரும்.
தீர்த்தமாடி
எல்லா முகமும் எழில் சாத்தும்.
காஞ்சிபுரம்
மாறுகரை வேட்டியுடன்
நகைநட்டும் படையெடுக்கும்.
கோவிலடி மின்னிக் கொலுவிருக்க
பெயின்ற் பூசி
வாகனங்கள் எழுந்து
வலம் வரவே ‘ரெடி’ ஆகும்.
தங்கரதம், கைலாச வாகனம், தேர், சப்பறமும்
இங்குயிர்க்கப்…பக்தர்
எங்கிருந்தோ வந்தணைவார்.
நாலைந்து பேர் திரிந்த வீதி ‘நரர் நதியாகி’
நீளும்.
கற்பூர நெடி நிலைக்கும்.
ஐயர்மார்
பட்டுச் சால்வையுடன் பளபளப்பார்.
தவிலருவி
கொட்ட,
‘மல்லாரி ‘ ‘சங்கதிகள்’ குழைத்தூற்றும்
‘பத்மநாதன்’ நாதஸ்வரம்
‘பவனியினை’ வரவேற்க,
‘கொம்புகாவும்’ முன்னே
குரல்வைக்கும் ‘தருமண்ணை’
‘அப்பையாம்மான்’ ‘பொடியள்’
அனைவரிலும் உசார் பூக்க,
நித்திய விரதகாரர்
நேர்ந்துருண்டு நெஞ்சிளப்பார்!
அன்னதான மடங்கள் அவிசொரியும்.
அயலெங்கும்
‘கந்த புராணம்’ கேட்கும்.
‘கச்சேரி’ களை கட்டும்.
பந்தல்கள் கடைகள் பசிதணிக்கும்.
காவடியின்
சிந்து நடை கேட்டுத் திசை ஆடும்.
துணை பிடித்து
வேல்…வெளிவீதி சுற்றி
விதவிதமாய் ‘இருபத்தைந்து —
நாள்’ சிரிக்கக் காதல் நலமோங்கும்….
இது வழமை!
இந்தச் சந்தோசம் எங்களுக்கு ஓர் பெரிய
நிம்மதியாம் !
துயர் வெயிலுள் ஒதுங்கவரும் நிழல் மடியாம்!
சம்மதியோம்;
இதற்கு தடை வர நாம் சம்மதியோம்!
இம்முறையும்….
நீண்ட ‘நிம்மதிக்காய்’ நேர்கின்றோம்!
“09.09.2018 தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையும் நல்லூர் திருவிழா வேளையில் 1995 இல் வலிகாமம் இடம்பெயர்வில் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த 1996 இல் நடைபெறவிருந்த நல்லூர் திருவிழாவுக்காக 19.08.1996 அன்று நான் எழுதிய கவிதை ‘அருணன்’ என்ற புனை பேரில் ‘நல்லூர் வருடாந்த மாகோற்சவம் நேற்று ஆரம்பமானது’ என்ற அடிக்குறிப்போடு ‘உதயனின்’ வார வெளியீடான ‘சஞ்சீவியில்’ வெளிவந்தது.
22 ஆண்டுகளின் பின் இன்று ….எத்தனை மாற்றங்கள்…ஆனாலும் மாறாதது நல்லூரானின் அழகும் அருளும் பெருமையுமே….”