நல்லூரின் நாதன், நமைஇயக்கும் ஞானசக்தி
வல்லோன், நினைத்த வரம் தருவோன் –எல்லோரும்
ஏற்கும் எழில்நிபுணன், ஈடில் அருள்மழையோன்
காற்று நிலம்அவன்தீ காண்!
நல்லூர்த் திருவிழா நாளொவொன்றும் எம் மனதுக்
கல்லைக் கரையவைத்துக் கற்பூர –வில்லையாக்கி
பற்றி எரியவைக்கும்! பாவ வினைபொசுக்கும் !
குற்றமற்றுப் போம் எம் குணம்.
இருபத்து ஐந்து எழில் நாட்கள் நம்மைப்
பெரியர் சிறியரென்ற பேதம் –கருதாமல்
வாழ்விக்கும் நாட்கள்! வணங்கி எழ எங்கள்
ஊழ்வினையும் நீறும் உணர்!
செம்மை, வே றெங்குமிலா சீர், அழகு, நேர நேர்த்தி,
தம்மைப் புதுப்பித்தல், சான்றாதல் —அம்மா
அகில உலகில் அலங்காரக் கந்தன்
புகழைவிட எங்கு ? புகல்!
தங்கத்தில் கூரை தகதகக்கும் இன்னுமொரு
தங்கமயில் என்று தரைஜொலிக்கத் –தங்கமயம்
ஆன பொருளென்ன? ஆட்டும் இருட் துயர
ஈனம் அகற்றவா ஈது?
பேரழகின் உச்சம் பெருமைகளின் மிச்சம்
ஊர் உலகே கூடி உருகுதினம் –ஆறுமுகன்
நேர்கண்டுன் துன்பப்பொய் நீக்குமிடம்… நல்லூரின்
தேரடா தேரடா தேர்!
சப்பறமும் தேரும் தலைமுழுகும் தீர்த்தமதும்
இப்பிறப்பில் கண்டிடவே என்னதவம் —எப்பிறப்பில்
செய்தோமோ? நல்லூரில் சொர்க்கச் சுகம் துய்த்து
உய்வோம் முருகால் உயர்ந்து!
மின்னிறங்கி னாற்போல் மிகநலியும் ‘மின்னேற்றும்
மின்கலமே ‘ போன்ற வெறும் மனதை –மின்னேற்றி
மீண்டும் நிறைக்கும் விழாநல்லை மின்விழாதான்
வேண்டும்….வரங்கள் விரைந்து!