வல்லமைகள் கோடி வரமாய்த் தரும்சக்தி
தொல்லை துயர்கள் துடைப்பாளாம் –“இல்லை
எவரு” மென அஞ்சாதே! ஈடில்லா அன்னை
அவளே துணையாம் அணை!
அணுவின் இயக்கம் அனைத்தினதும் ஆற்றல்
உணர்வுயிரின் தூண்டல் உடலின் –இணக்க
அசைவிவற்றின் மூலம்;; அருட்சக்தி! வாழ்வின்
விசையுமவள்: சொல்வாள் விதி!
தாயொருத்தி…. ஆனால் தனம் கல்வி வீரத்தை
சேய்களுக்கு ஊட்டத் திரிசக்தி –ஆகி
அருள்வாள்! உனது அகப்புறச்சீர் ஓங்க
பொருளாவாள் வாழ்த்து புரிந்து.
பெண்மைக்குள் இந்தப் பிரபஞ்சம் உள்ளதெனும்
உண்மை உரைக்கும் ஒளிச்சுடராய் –கண்பறிக்கும்
துர்க்கையின் லட்சுமியின் தூயள் சரஸ்வதியின்
அர்த்தம் உணர்ந்து அறி!
முப்பெரும் தேவியர்க்கும் மும்மூன்று நாட்களாக
அப்பழுக் கற்று அமைந்தவிழா –இப்போது!
சுண்டல் அவலுண்டு சொல்மூவர் நாமத்தை!
வண்ணம் பெறுமேயுன் வாழ்வு.
“ஞானமும் வீரமும் நற்திருவும் பெற்றமகன்
வானாழ்வான்”; என்பதனை மண்ணுணர — மூவரூடு
காட்டும் விழாவில் கலைசுவைத்துச் சக்திபெறு!
மீட்டுஎடு உன்னை விரைந்து.