என் கவிதை சிந்தனைகள்

த.ஜெயசீலன்

1. கவிதை கடவுள் போன்றது என்பர். எப்படி கடவுளை, அவரின் இயல்பை, அவரவர் உணர்ந்து புரிந்து கொள்கிறார்களோ அதைப் போலத்தான் ‘இது தான் கவிதை’ என எவரும் கவிதையை உணர்ந்து புரிந்து கொள்வதும் எனலாம்.

2. ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்ததை, தமக்கு உவப்பானதை, தமக்கு வருவதை தமது அளவுகோல்களைக் கொண்டே அளந்து தமது கவிதை பற்றிய கோட்பாட்டை வரையறுக்கிறார்கள். முன் வைக்கிறார்கள்.

3. இவர்கள் யானை பார்த்த குருடர்களுக்கு ஒப்பானவர்கள். தாம் தொட்டு உணர்ந்ததை மட்டும் கவிதை என்பார்கள். ஆனால் இவர்களைத் தாண்டி முழுமையான யானைக் கவிதை வாழ்கிறது.

4. கவிதை சமூகத்தின் , காலத்தின் கண்ணாடி எனலாம்.

5. அவ்வளவு இலகுவல்ல கவிதை எழுதுவதும் கவிஞனாவதும்.

6. எதுவும் எதையும் கவிதையாக்கலாம். எனினும் எழுதப்படும் எதுவும் எல்லாமும் கவிதையாகாது.

7. ஒரு விடயத்தை நேரடியாக சொல்வது கவிதை ஆகி விடாது. கவிதைக்கு பூடகத் தன்மையும் அவசியம். அதன் வரிகளுக்கிடையில் மறைபொருளாக உள்ள விடயங்கள் வெவ்வேறு வாசகர்களுக்கு வெவ்வேறு அனுபவத்தை ஏற்படுத்தும்.

8. பயிலப்பயில புதுவிடயங்களை தருவதாக இருப்பது நல்ல கவிதைகளின் பண்புகளில் ஒன்று.

9. ஓசை, யாப்பு, உவமானம் உவமேயம் , உருவக அணிகள், படிமம், குறியீடு, உத்திமுறைகள், புதுமை, கற்பனை, தத்துவார்த்தம், இவை எல்லாம் ஏற்ற விகிதத்தில் கலந்ததே கவிதை.

10. கவிதை ஒரு சூத்திரம் தான், அது சிறு பகுதிக்குள் பெரிய விடயங்களை பேச வேண்டும். பார்க்க எளிமையாகவும் உள்ளிறங்க ஆழமான விடயங்களை கொண்டதாகவும் கவிதை இருப்பது சிறப்புக்குரியது.

11. “இப்படி நான் பார்க்கவில்லையே” என்ற கணநேர வியப்பை, அதிர்ச்சியை
ஏற்படுத்துவது முக்கியமான கவிதை இயல்பு. புதிய புதிய கற்பனை, புதுக் கோணத்திலான வித்தியாசமான பார்வை, சிந்தனை என்பன இவ் வியப்பை ஏற்படுத்தும்.

12. ஒன்றை அல்லது ஒரு சம்பவத்தை விபரிப்பதாக, ஒரு பொருளை உணர்வை கருத்தை நீதியை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்துவதாக, கவிதை இருக்க வேண்டும். எந்த நோக்கமும் அற்று எழுதுவது கவிதை ஆகிவிடாது.

13. கவிதை ஒரு கண்டுபிடிப்பாக அமைய வேண்டும். வாழ்க்கை, வரலாறு, இயற்கை, தத்துவம் என்பன ஒளித்துவைத்தவற்றை எடுத்து துலக்கி அழகாக்கி வழங்குவது கவிஞனின் பணியாகும் அதுவே அவனின் மொழியாகும் குரலுமாகும்.

14. புரியாமல் எழுதுவது, இருண்மையானதாக கவிதையை புனைவது, பல்பரிமாணமுள்ளது எனக் கூறிவிட்டு எவருமே விளங்கிக் கொள்ள முடியாமல் ஒரு பரிமாணமும் புரியாமல் எழுதுவது என்பன பிரபலம் தேடுவதற்காக கையாளப்படும் போலித்தனங்கள் தான். யாருக்கும் புரியாமல் எழுதுவது மட்டும் கவிதையாகிவிடாது.

15. கருத்தை பார்வையை கவனத்தை தம்பக்கம் திருப்ப, அதிரடி தலைப்புகளுடன், எழுத எத்தனையோ விடயங்கள் சமூகத்தில் இருக்க வலிந்து பாலியல் வக்கிரங்களாகவும் ஆழ்மனப் பிதற்றல்களாகவும் எழுதப்படும் எண்ணற்ற கவிதைகளில் எத்தனை கணிசமான வாசகரின் மனங்களைத்தானும் கவர்ந்தன?

16. இது “அரோகரா”என்று சொல்லுமிடத்தில் “ஐயோ” எனச் சொல்லிக் கவனத்தை தம்பக்கம் ஈர்க்கும் உத்தி மட்டுந்தான். இதனால் கவிதைக்கு என்ன பலனும் வரப்போவதில்லை.

17. இன்றைய தலைமுறை கண்டுகொண்டிருப்பது, புரிந்து வைத்திருப்பது தான் எமது கவிதையா?

18. கவிதை பற்றி ஆயிரம் கோட்பாடுகள் விளக்கம் வியாக்கியானங்கள் செய்பவர்கள் எழுதும் கவிதைகளில் அக் கோட்பாடுகள் விளக்கம் வியாக்கியானங்கள் அனேகமாக இல்லாதிருப்பது இன்றைய யதார்த்தமாகும்.

19. கவிதை கோசமாக இருக்கக் கூடாது என்று எந்தச் சட்டத்திலுமில்லை. தேவைக்கேற்ப கோசம் போடுவதாகவும், பிரச்சாரம் செய்வதாகவும், தட்டிக் கேட்பதாகவும், கேள்வி கேட்பதாகவும், உண்மை உரைத்து மனதை மனிதரை மனிதத்தை வழிப்படுத்துவதாகவும், ஓசைவயப்பட்டதாகவும், உணர்ச்சிப் பெருக்கு மிக்கதாகவும், ஒருபரிமாணமுடையதாகவோ அல்லது பல்பரிமாணமுடையதாகவும் கூட கவிதை இருக்கலாம்.

20. கவிதை இயல்பாய்ச் சுரக்க வேண்டும் வலிந்து எழுதுவது செய்வது, பொய்யாக ஒன்றைப் படைப்பது, ஒன்றைப் பார்த்து பிரதிபண்ணுவது நகலெடுப்பது, கவிதையின் உயிர்ப்பைச் சிதைத்துவிடும்.

21. எழுதிய கவிதையை மீளமீள வாசித்து அதனை மேலும் திருத்தி செம்மை செய்வது அதனை மெருகேற்றும்.

22. மெய்க் கவிதை ஒரு தூண்டியாக செயற்பட்டு இன்னொரு கவிதையை தோற்றுவிக்க எண்ணப் பொறியை, பொறிகளைத் தருவதாக அமையும்.

23. ஒரு நல்ல கவிதை பாய்ந்து பரவி தொற்றும் தன்மையுடையதாக .இருக்க வேண்டும்

24. நவீன கவிதை அசையும் தன்மையற்று கல்லாய் கட்டிப்பட்டு இறுகிக்கிடக்கிறது. இதனைப் பிரயோகித்தால் காயம் தான் சமூகத்தில் ஏற்படும். தொற்றி சமூக மனங்களில் சுவறி அங்கே வேதியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமெனில் கவிதையானது பாய்ந்து பரவி தொற்றி தாக்கு திறன் மிக்க திரவமாக இருக்க வேண்டும்.

25. கவிதை என்னூடாக தன்னை எழுதிக்கொள்கிறது என்பது எனது அனுபவம்.

26. கலைகள் உணர்வை ஆற்றுப் படுத்துபவை. கலைகளின் அரசியான கவிதை உணர்வுக்குரியது. யதார்த்தம் கடந்து கற்பனையில் சஞ்சரித்து எண்ணம் விரிந்து கனவில் மிதப்பது. அதாவது இதயத்திற்குரியது. அது இன்று அறிவுக்குரியதாக மூளைக்குரியதாக மாறிவிட்டது. ஆதனால் தான் அது வெறும் விவாதப் பொருளாகி செழிப்புக் குறைந்து ஒரு வரண்ட பண்டமாகிவிட்டது.

27. உணர்வின் ஒன்பது இரசங்களையும் பற்றி சொல்ல அவற்றை நெறிப்படுத்த கவிதை ஒரே மாதிரி இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. வேவ்வேறு உணர்ச்சிகளுக்கு கவிதை வடிவங்களும் பாணியும் மாறுபடலாம்.

28. இயற்கையில் தோன்றிய உயிர்களில் தேவைக்கேற்ப பல்வகைமை (diversity ) உள்ளது போல பல்வேறு வகைமாதிரிகளைக் கொண்ட பல மனப்பாங்குடைய சமூகத்துக்கு சேதி , நீதி சொல்ல கவிதையும் பல்வகைத்தன்மை கொண்டதாக விளங்க வேண்டும்,

29. கவிதை என்றும் ஒரே மாதிரி இருந்ததில்லை. காலத்திற்கு காலம் பாடுபொருள் வடிவம் மாறியிருக்கிறது. அதாவது சங்க காலத்தின் பாடு பொருளும் வடிவமும் கலித்தொகைக் காலத்தில் இருந்ததில்லை. இவ்வாறே இன்று வரை கவிதை மாற்றத்திற்குள்ளாகி இருக்கிறது. இந்த கூர்ப்பு ரீதியான நல்ல மாற்றம் வரவேற்கத்தக்கது.

30. கவிதையின் சோடனை ஒப்பனை இயல்புகள் கறிக்கு உப்புப் புளி போல அளவாக இருக்க வேண்டும்.

31. இன்று கவிதை ஒன்றில் வெறும் வசனமாக வருகிறது அல்லது அதீத மிதமிஞ்சிய சோடனையுடன் வலிந்த ஒப்பனையுடன் திணிக்கப்பட்ட பொருந்தாத உவமை ஒப்பீடுகளுடன் விளங்க முடியாததாக வருகிறது. இவை இரண்டும் கவிதைக்கு பொருத்தமல்ல.

32. எமது கவிதைப் பாரம்பரியம் மிகமிக செழுமையானது. எமது கவிதையும் எம் மிக மிக முக்கியமான மரபுரிமைச் சொத்து தான்

33. கட்டுரை இசைக்கு இடைப்பட்டது கவிதையின் இயல்பான ஓசைப் பண்பு. செம்மையான ஓசைப் பண்பு மிக்க கவிதை கேட்கையில் எவரையும் கிறங்கச் செய்யும்.

34. “ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ”….
“பாட்டைப்போல் இன்பம் பாரின்மிசை இல்லையடா” என்பவை பாரதியின் கூற்றுகள். இவை கவிதையின் ஓசைச் சிறப்பை எடுத்துக்காட்டுபவை.

35. சொற்களுக்குள் இயல்பாக ஓசை ஒத்திசைவு உண்டு , அதை ஒழுங்காக்கினால் ஓசை நயமுள்ள கவிதை தோன்றும் இல்லையெனின் வெறும் இரைச்சலே மிஞ்சும். ஓசைப் பண்பைப் புறக்கணித்தே ஆக வேண்டும் என்பது அவசியமற்றது. சொல்ல வந்த பொருளை சிதைக்காத ஓசை நயம் அவசியமானதே.

36. ஓசை ஒழுங்குள்ள கவிதை ஓரிரு முறை படிக்க மனதில் பதிந்து மனனமாகிவிடுகிறது. இந்த இயல்பால் தான் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன் வந்த கவிதைகளும் செவிவழியாக எத்தனையோ தலைமுறை கடந்து வாழ்ந்தது. வாழ்ந்து வருகிறது.

37. நல்ல கவிஞனுக்கு யாப்பு தடையாக இருக்காது. அவனின் கவிதை வீச்சை அது அதிகரிக்கவே உதவும் .

38. கவிஞர் முருகையன் கேட்டது போல “நாமென்ன காதுகளை களற்றிவைத்து விட்டோமா ஓசை நயத்தைப் புறக்கணிக்க?”

39. 1970 இன் பின் மரபுக் கவிதை இறந்துவிட்டது என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது. பல உதாரணங்கள் ஈழத்திலே உண்டு. அது அன்றிலிருந்து இன்றுவரை பலரால் இரசிக்கப்பட்டே கொண்டாடப்பட்டே வருகிறது.

40. ஈழக் கவிதையில் பேச்சோசைப் பண்பு தனித்துவமானது. கவிஞர்களான மகாகவி, முருகையன், சோ.பத்மநாதன், புதுவை இரத்தினதுரை, கல்வயல் குமாரசாமி என நீண்டு இன்றும் தொடர்ந்து வருவது.

41. இன்று எத்தனையோ யாப்பு வடிவங்கள் வழக்கொழிந்து விட்டன. இன்றைய காலத்திற்கேற்ப யாப்பு வடிவத்தை இனங்காண்பது அவசியம்
42. எமது மரபுக்கவிதைகளை தீட்டுகளாக பார்க்கும் நிலை மாற வேண்டும்.

43. மரபில் தேவையற்றவற்றைக் களைந்து நவீன மேலைத்தேய சிந்தனைகள் உத்தி முறைகளில் எமக்கு தேவையான பொருந்தக் கூடியவற்றை உள்வாங்கி முன்செல்வது உகந்த வழிமுறையாகும்.

44. கவிதையை அறிந்து கொண்டு புதிய பருசோதனைகளைச் செய்வதும் மரபை அறிந்து கொண்டு அதனை மீறுவது மாற்றத்துக்கு உள்ளாக்குவது என்பதுவே பொருத்தமானது.

45. இதையே “கவிதை மரபுக் கவிதையாகவும் இருக்க வேண்டும் அதே அதேநேரம் புதுக்கவிதையாகவும் இருக்க வேண்டும்” என்றும் கவிஞர் முருகையன் கூறினார்.

46. பாரதி ஒரு யுகசந்தி தமிழின் பழைய புதிய கவிதை வடிவங்கள் அனைத்தும் பாரதி கவிதைகளில் உண்டு. பாரதியைக் கூட பயிலாத தலைமுறை எப்படி தமிழில் கவிதை எழுதுகிறது?

47. எங்களிடம் கவிதைப் பாரம்பரியமே இல்லை என்ற மனப்பாங்கும் ,மேற்கத்திய கவிதைகளிலிருந்தே எம் கவிதைகள் வேர்கொள்கின்றன என்ற மாயைக் கருத்துகளும்,. அவை போன்றவையே உண்மைக் கவிதைகள் என்ற மனநிலையும், சில நவீனர்களிடமுண்டு. இது அவர்களின் அபிப்பிராயம் மட்டுமே.

48. எமது செழுமையான கவிதை பாரம்பரியத்தை அறிய, நாம் எவ்வளவு சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் என்பதைப் புரிய, அதன் வியாபகங்களை விளங்க, அறிய , நாம் தயாரில்லை என்பதும் எமது சாபக்கேடாகும்.

49. தமிழ் கவிதையின் சுமார் 2000 ஆண்டுகால பாரம்பரியத்தின் தொடர்ச்சியை வளர்ச்சியை தேவை இல்லை என சுலபமாக புறந்தள்ளி ஒதுக்கி விடுதல் புத்தியுள்ளோர் செய்யும் செயல் அல்ல.

50. தலைப்பையும் எழுதியவர் யார் என்பதையும் தவிர்த்துப் பார்த்தால் எல்லாக் கவிதையும் ஒன்று போலவே இன்று இருக்கிறது என்கிறார்கள். இது இன்றைய புதுக்கவிதையின் பலவீனங்களுள் ஒன்று.

51. ஒவ்வொருவருடையதும் கவிதை தனித்தன்மையானதாக இருக்க வேண்டும் முதற் தடைவ கேட்கும் போதே, வாசிக்கும் போதே இது யாரின் கவிதை என அடையாளம் காட்டுவது சிறப்பம்சமாகும்.

52. கவிஞனின் விருப்பம் சுதந்திரம் கவிஞனுக்கான கவியெழுதுவதிலுள்ள அனுமதிகள் (poetric licence ) என்பன இன்று கருத்திலெடுக்கப் படுவதில்லை. இது தவறு.

53. காலம் தான் நல்ல கவிதையைக் காப்பாற்றும் விமர்சனங்கள் அல்ல. எத்தனையோ விமர்சகர்களும் விமர்சனங்களும் காலத்தில் காணாமல் போய்விட்டனர். ஆனால் நல்ல கவிதை நின்று நிலைக்கிறது. இதற்கு பாரதியை விட ஒரு உதாரணம் தேவையா?

54. வெறும் கல்லை ஒப்பற்ற சிலையென்றும் சிலையை அற்பக் கல்லென்று காணும் தம்தம் தனிப்பட்ட அல்லது அமைப்பு நலன் சார்ந்த, ஏதோ உள்நோக்கம் அரசியல் கொண்ட, விமர்சனங்களால் இலக்கியத்திற்கும் கவிதைக்கும் பயனேதுமில்லை.

55. குழுமனப்பாங்கும் இன்றைய நடுநிலை தவறிய, வட்டம் அல்லது கட்சி சார்ந்த, ஏதோ அரசியல் பின்னணியுள்ள விமர்சன மனநிலையும் அர்த்தமற்றவை.தாம் சொல்வதே சரி தாம் சொல்வதையே எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேணும் என்ற அராஜக மனநிலையே விமர்சகர்களின் மிஞ்சிய சொத்தாக இருக்கிறது.

56. இலக்கிய அணிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு தனிப்பட்ட நபர்களுக்கெதிரான பகைமையை மட்டுமே இன்று வளர்த்துள்ளது.

57. மற்றவனின் படைப்பைப் பாராட்டும் ,ஏற்றுக் கொள்ளும் ,முயற்சியைப் போற்றும் ,சகிப்புத் தன்மையுடன் வாழும், மனநிலையில் இன்று சக கவிஞர்களும், குழுக்களாக சிதறிக் கிடப்பவர்களும், விமர்சகர்களும் இல்லை. இதுவும் நமது சாபக்கேடு தான்.

58. தேவையானவருக்கு, தன் பின் நிற்பவர்களுக்கு, பட்டங் கட்டுவதும் பிடிக்காதவரை மட்டந்தட்டுவதுமாகவே நடுநிலை அற்ற விமர்சன நிலை இன்று உள்ளது.

59. தமக்கு பிடிக்காத படைப்பை, படைப்பாளியை ,தீட்டாக தீண்டத்தகாதவனாக பார்க்கும் இலக்கிய தீண்டாமை சாதிய கொடுமையை விட இன்று மேலோங்கி இருக்கிறது.

60. கவிதை மக்களுக்கானது. சமூகத்திற்கானது. மக்களையும் சமூகத்தையும் வழிப்படுத்த கவிதையை பிரதான கருவியாக கொண்டு கவிஞன் சமூகப் பொறுப்போடு மனிதத்தை வளர்தெடுக்க முயல வேண்டும். தன்னிடமுள்ள மிருகக் குணங்களை குறைக்க மனிதத்தை மேம்படுத்த இலக்கியமும் ஒருவருக்கு உதவும்.

61. இலக்கியம் அதிலும் கவிதை மனிதத்தை வளர்க்க, மென்மை மேன்மைப் படுத்த, முயல வேண்டும்.

62. மனிதம் வளர்ந்தால் அன்பு பெருகும் அன்பால் உறவு நிலை மேம்படும். ஆனால் இன்று இலக்கிய சூழலில் வெறுப்பும் காழ்ப்பும், தானென்ற அகங்காரமும், பிறனைப் புறக்கணித்து ஒதுக்கும் மேதாவி மனநிலையும், தானே அதிகரித்திருக்கிறது. அன்பை, பரஸ்பரப் புரிந்துணர்வை, பிற படைப்பு படைப்பாளனை ஏற்றுக்கொள்ளலை, ஜனநாயக ரீதியான கருத்து சகிப்புத்தன்மையை, வளர்க்காத இன்றைய இலக்கியம் மனிதத்திற்கு மானுடத்திற்கு எதிரானது எனலாமா?

63. இன்றைய சூழல் நெருக்கடிகளுக்கிடையிலும் இடையறாத படைப்பு மனப்பான்மையைக் காத்துக் கொள்ள வேண்டும். தொடர்ச்சி தடைப்பட்டால் படைப்பாளுமை தேங்கும்

64. இன்றைய சூழலில் யாரும் பாரதி போல முழுநேரக் கவிஞனாக வாழ முடியாது. சராசரி வாழ்வையும் வாழ்ந்து கொண்டு தான் கவிஞனாகவும் விளங்க வேண்டியிருக்கிறது.

65. ஆரம்ப நிலைக் கவிதைகளை கவிஞர்களை ஆதரிக்கும் அதேநேரம் அவர்கள் அடுத்த படி நோக்கி செல்ல வழிகளை, கவிதைகளை, காட்ட வேண்டியது நமது பொறுப்பு.

66. ஒரே பாணியில் அமைந்த கவிதையை யாரோ சிலர் தேவை கருதியாரையோ எந்த வட்டத்தையோ கழகத்தையோ அரசியலையே திருப்திப்படுத்த ஊதி வளர்த்தாலும் அது மண்ணோடு மனதோடு மெய்யோடு ஒட்டாது நிற்பதால் வெற்றி பெற்று நீடூழி வாழாது.

67. அவரவர் தமக்கு பிடித்தவையை தமக்கு வருவதை தாம் எழுதுவர், செய்வர். அவ்வாறில்லாமல் “இதைத்தான் எழுது, இப்படித்தான் எழுது, இதைத்தான் இரசி” என எவரும் எவருக்கும் கட்டளையிட முடியாது. “இப்படி எழுதுவதே கவிதை ஏனையவை கவிதைகளே இல்லை” எனத் தீர்ப்புரைக்கும் சட்டம்பித் தனம் அபத்தமானது. இது முன்பு குற்றமாக பார்க்கப்பட்ட மேடுக்குடி பண்டித குருபீட மனப்பாங்கிற்கு சற்றும் குறையாதது.

68. பண்டிதர் காலத்தில் இருந்ததாக கூறப்படும் சச்சரவுகளும் மறுதலிப்புகளும் அங்கீகரியாமைகளும் அதே அளவில் புதுக்கவிதைகளிடமும் புதுக்கவிதைக் காரர்களிடமும் இன்று இருக்கிறது.

69. எப்படி யாப்பு கவிதைகளில் ஒருகாலத்தில் சலிப்பு ஏற்பட்டதோ அதே போல புதுக்கவிதைகளிலும் தற்போது ஏற்பட்டுள்ள சலிப்பானது ‘பழையன கழிந்து புதியன புகுதலுடனான’ மரபுக் கவிதையின வருகையை காலம் மீள எதிர்பார்க்கிறது என்பதனை எடுத்துக்காட்டுகிறது

12.10.2018.