நெஞ்சைக் கரைக்கும் நிஜக்கலைகள் யாவும்
நினதருளால்
விஞ்சிக் குவிந்தன விண்வரையும்…நாங்கள்
வியந்தவற்றை
பஞ்சாக்கி வாழ்வின் பழிதுடைக்கப் பாவித்தோம்
பாரடி நின்
கஞ்சமலர்ப் பாதம் கதியாம் சகல
கலாவல்லியே !
சந்தக் கவியும் சகலரையும் தொட்டுச்
சதிராட்டும்
விந்தை இசைவகையும் வேடமிடும் நாடகமும்
மேன் மகளே
உந்தன் பணிப்பால் உலகிலெழும் இந்த
உயிர்ப்புகளால்
கந்தையான வாழ்வும் களிக்கும் சகல
கலாவல்லியே !
உன்னைத் தொழுது உயர்ந்தோங்க ஒன்பது
உத்தம நாள்
தன்னையும் தந்தாய் தமிழரின் வாழ்வின்
தனித்துவத்தை
இன்றும் உணரவைப்பாய் எங்கள் கலைவகைகள்
எண்ணிலாது
கண்முன் பெருகிடக் காப்பாய் சகல
கலாவல்லியே!
அன்றொருநாள் நின்னைப் புகழ்ந்ததால் நூறு
அருட்கலைகள்
நன்றாய்ப் பயின்றவன் ஞானக் கவியும்
நவின்றுவென்றான்!
இன்று அவனைப்போல் எல்லாக் கலையும்
எனக்கருள்வாய்
கன்னியே வந்து கரந்தா…. சகல
கலாவல்லியே!
மன்னவரும் ….ஆற்றல் மனம்கண்டு அன்று
மதித்ததுபோற்
தன்மை வரச்செய்! தலைநிமிர்ந்து ஏற்ற
சரிசமானம்
இன்று இளம்கலைஞர் கொள்ளவைத்து அன்னார்
எழுச்சியுற
கன்னல் மொழிசொல் வழிசொல் சகல
கலாவல்லியே
முந்தைக் கலைகள் மறந்துமே யாரோ
முனகியதைப்
பந்தி விரித்துப் படைத்து பிரதியும்
பண்ணிவைத்து
சொந்த அடையாளம் தோற்க முகமும்
தொலைத்துள்ள
கந்தல் கசக்கியே கட்டு சகல
கலாவல்லியே!
விலைபோய்… எமது விழுமியமாம் கூத்தும்
விசைக்கவியும்
குலையாமல் மீட்டுக் கொடுஉயிரை ‘ஞானக்
குரலாக
உலகுக் கெமதுகலை மாறவே’ உன்கண்
ஒளிபாச்சு
கலையால் உலகாள வை! வா! சகல
கலாவல்லியே !