விந்தைகள் ஆயிரம் செய்து விளைந்த நம்
வீரத்தை யார் மறந்தார்கள்? –அதன்
வேரினை யார் அறுத்தார்கள்? –வெறுஞ்
சந்தையாய் மாறி உழலும் நிலத்திலார்
தங்கம் விளைத்திடுவார்கள்? –இந்தத்
தப்பைத் திருத்துவ தார் கொல்?
நீண்ட தலைமுறை யாக நிலவிய
நிம்மதி போனது எங்கு? –எங்கள்
நீதி அகன்றதும் எங்கு? –அர
சாண்ட குடி அடி வருடிக் கிடக்குதே
அற்பராய் மாறினோம் இன்று –மீண்டும்
அற்புதம் காண்பது என்று?
எங்கள் நிலம் அதில் எங்கள் தமிழ் அதில்
எங்கள் கலைவகை கொண்டே —கொடி
ஏற்றினோம் சாதனை கண்டே –அதில்
பங்கம் விளைந்தது பஞ்சம் நிலைத்தது
பாறினோம் தோல்விகள் தின்றே –உயிர்
பட்டும்…விழவில்லை இன்றே!
எங்களுக் குள்ளே இருக்கும் சுயநலம்
எத்தனை நாளின்னும் நீளும்? –என்று
எங்கள் பொதுநலம் வாழும் ? –எம்மைச்
சங்காரம் செய்ய எதிரி எதற்கு? எம்
சகோதரமே கத்தி தீட்டும் –எங்கள்
தலைமுறையே வைக்கும் வேட்டும்!
நொந்து கிடந்த நாம் வெந்து தவித்த நாம்
நோன்பு கிடந்திருந்தோமா? –தோற்று
நோயில் நலிந்தழிவோமா? –எங்கள்
விந்திலே வீரியம் வீழலை! நாளையை
வெல்லும் தலைமுறை கண்டு –நாமும்
விளைவோம் பொலிவுகள் கொண்டு!
எம்மைப் பழித்தவர் எம்மை இழித்தவர்
எம்மை அழித்தவர்க் கெல்லாம் –பதில்
என்னடா? சொல் நல்ல…சொல்லாம்! –இன்னும்
நம்பிக்கை உள்ளது நாறியும் நீறியும்
நஞ்சானதும் உயிர் மீளும் –அன்று
நம் மகுட நிழல் ஆளும் !