துளிகளை ஊசிகளாய் ஆக்கி
தொடுகைமுறை
சிகிச்சை ‘அக்குபஞ்சர்’
செய்கிறது தூறல் மழை!
அண்ணாந்து பார்த்தேன்;
பெண்மை முகிற் கைகளினால்
எண்ணற்ற துளிகள் அள்ளி
என் முகத்தில் நீர்க்கோலம்
வரைகிறது;
என்காதில் தன்மொழியில் வாழ்த்துத்தேன்
தருகிறது;
குளிர்த் தங்கை தனைக்
கொஞ்சச் சொல்கிறது!
திசையைக் கரித்துணியால்
போர்த்துக் கழுவிவிட்டு
பசையாக்கி மண்ணின் மனஇறுக்கம்
தளர்த்திவைத்து
மரங்களுக்கு வழமைபோல்
பூப்புனித நீராட்டி
வரங்களை வழங்கிடுது!
வாரடித்து நம் ஊரில்
தெருக்களை வாய்க்காலைத்
‘தெறிக்க’ விடுகிறது!
மரபுக் கவிதையாக மடைதிறந்து
சந்த ஓசை
பெருகப் பொழியு(ம் ) மழை….
நம் கூரைத் தாழ்வாரம்
தனிலோ….
புதுக்கவிதை யாகத் தன பாட்டினிலே
தினவு தணித்துச்
சிந்தித் சிதறிடுது!
நீண்ட கொடுங் கனவாய்
நனவில் வந்த கோடையினைத்
தீண்டி அடக்க இந்தத் தினம் வந்த
வருட மழை
ஏதோ தனிமையையும்
இதய ஓரத்தில் அச்ச
ஏக்கத் தினையும்தான்
இம்முறை கிளப்பிடுது!