வேளை நெருங்கிடணும் –விடிவொன்று
வென்று வரவேணும் –வெறும்
பாழைச் சுமந்த நிலம் –பச்சைசாத்தி
பலனைப் பெறவேணும் –இன்று
வாளைச் சுழற்றுபவர் –அகன்றவர்
வாலும் அறவேணும் –நாங்கள்
ஊழை ஜெயித்தவர்கள் –எனப்பிற
ஊர்கள் சொ(ல்)ல வேணும் !
தூர இலக்கடைய –பலதரம்
துள்ளினோம்…சோர்ந்திழிந்தோம் –கண்ட
வீர யுகத்தினிலே –தோற்றன்று
மிஞ்சியதும் இழந்தோம் –இடர்ப்
பாரம் சுமந்து உள்ளோம் –இனம் மீள
பாதையையும் மறந்தோம் –மன
ஈரம் வடியவில்லை –என்றுதான்
எம்மைநாம் மீட்டெடுப்போம்!
“தோற்று விழுந்தவரும் –ஒன்றாகினால்
தொல்லை மீளத் தருவார்” –என்று
வேற்றுமை தூண்டுகிறார் –திட்டமிட்டு
விரிசல் தனை வளர்ப்பார் –நாங்கள்
ஆற்றலை வீணடித்தோம் –எம்முளே
அடிபட்டு மாய்ந்தழிவோம் –“இதே
ஏற்பட வேண்டும்” என்போர் –ஜெயித்திட
இன்று நாங்கள் சிதைவோம்!
ஆயிரமாய் கருத்து –வேறுபாடு
ஆனபோதும் எமது –குல
மேன்மைக்கு ஒன்றுபட்டு –உழைத்திடும்
வீரமேன் வீழ்ந்ததின்று? –இன்றெம்
மானமும் போகின்றது –சிறைப்பட்டு
மண்ணும் தான் வேகின்றது –இன்றைக்கு
நாமிங்கு ஒன்றுபட்டு — நடக்காட்டில்
நாளையும் போம்…நமக்கு!