கூடுகலைந்த குருவிகள்

கூடு இழந்த குயில்கள், குருகினங்கள்
வேடர்கள் நேற்று
விரித்த வலையினிலே
சிக்கி நிலைகுலைந்து செய்வ தறியாது
விக்கித் தவிக்கின்ற வேளையிது.
அகப்பட்ட
எதனையும்,எந்த வேளையிலும் இரையாக்கும்
விதமாக வேடர்கள்
விழியுருட்டிப் பார்த்துள்ளார்.
அவர்களது கைகளிலே
அழகழகாய் ஆயுதங்கள்.
அவர்களது காலடிக்கீழ்
ஆங்காங்கு எலும்புவகை.
அவர்களது கடைவாயில் அரும்பும்
குருதிமொட்டு.
புறாக்கள் சிலதின்
புறுபுறுப்புக் கேட்டாலும்…
அறுத்தெடுக்கப் பட்டனவே
அவற்றினதுஞ் செட்டைகள்.
வலையிருந்து மீழ வழிகளற்று…
விடியலினை
வரவேற்றுக் கூவ எழும்..அதற்குள் சேவல்;கள்.
கூடிக் குலவியுண்ட குணம்மறந்து
தம்வயிற்றைப்
பார்க்கப் பழகியன காகங்கள்.
பரிதாபம்
யார் யாரைப் பார்ப்பதென்ற
யதார்த்த வலையினுள்ளே
வாழ்க்கையை எத்தனைநாள்
வாழுமிக் குருகினங்கள்?
கூடு திரும்ப,
குலைந்த கூட்டைச் செப்பனிட,
பாறி விழுந்த பழைய மரம்விட்டு
வேறு மரந்தேட,
வீழ்ந்தவாழ்வை மீட்டெடுக்க,
காலம் கனிவதெப்போ?
சொல்வாரா கடவுளர்கள்

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply