புது(திர்)க் கோலம்

புள்ளிகளைச் சேர்த்துப் போட்டோம் 
புது(திர்)க் கோலம்.
புள்ளிகள் ஒருவரிடம் 
போதா திருந்ததனால் 
அவரிடம் இருந்த அவருடைய புள்ளிகளை, 
இவரிடம் இருந்த இவருடைய புள்ளிகளை, 
உவர்க ளிடம் இருந்த உதிரியான புள்ளிகளை,
என்றும் இலாதவாறு இணைத்துக் 
கலந்து புது 
வண்ணம் மிளிர வடிவொழுக 
நல்லதிதென்று —
உள்ளம் உரைக்க 
உலகும் வியந்து பார்க்க
பிள்ளையாராய் கோலத்தின் நடுவினிலே 
பூச்சூட்டி 
வெள்ளை நிறப் புள்ளியொன்றை வைத்தோம்! 
பொதுக் கோலம்
காற்று வெயில் மழைக்குக் கரையாமல் 
சிலபொழுதூர் 
போற்றக் கிடந்தது!
புறுபுறுப்பும் தொணதொணப்பும் 
புள்ளி களுக்கிடையில் எழுந்தாலும் 
புகைந்தாலும் 
“தள்ளிவிடக் கூடாது” என்று 
பலகரங்கள் 
பார்த்து இரசித்ததனால் 
பளிச்சிட்ட தக்கோலம்!
நேற்றக் கோலத்தை 
“நிஜமோ பொய்யோ” எனநாம் 
கேட்க …அவர் அவரின் புள்ளிகளைப் 
பிரித்தெடுத்தார்!
யாருடைய புள்ளிகள் அதிகம்?
எனும் போட்டி 
பேரங்கள் ஆகி 
பிழை சரியைத் தாண்டி…இந்த 
ஊருலகம் எள்ளி நகைக்கும் படியாச்சு!
யாருடைய புள்ளிகள் அதிகம் 
எனும் பிசகில், 
யாருமே தனித்துக் கோலமிடக் கூடாது 
என்ற சதியில் ,
கோலத்தை நீரூற்றி 
கலைத்த கதைநடந்து ‘போச்சு’!
கடல் வானும் 
அழகென்று சொன்னஅப் புது(திர்)க் கோலம் 
அழிந்தாச்சு!
அழகான கோலத்தை 
அழுக்காக் கிய தாரு?
மீண்டும் புதுப்புள்ளி களைத்தெரிய 
நிலம் மெழுகி 
கோலமிட வேணும்! 
அவர், இவர், உவர்களது 
புள்ளிகளைத் தெரிய வேண்டும்!
கோலமிடும் 
உள்ளங் களின் கள்ளம் 
யார்தான் உணர ஏலும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply