சூரன் போர்

சூரனுக்கும் முருகனுக்கும் தொடங்கியதே
சூரன் போர்.
ஆணவம்,கன்மம், மாயை — யாம்
மும் மல அசுரர்
தர்மத்தைத் தாக்க
“தடுக்கவேணும் ” என அமரர்
சர்வேஸ் வரனை வேண்ட
தனதும் தன தேவியதும்
சக்தி திரட்டி சரவணப் பொய்கையிலே
கக்கி…அறுமுகனாய்க் களமிறக்கி
மும் மலத்தை
சங்காரம் செய்த சரிதம் சூரன் போராச்சு!
பங்கமற்ற திக்காதை
பாரின் எண் திக்கினிலும்
உள்ள நிலையின் உருவகம் தான் இது
இன்றும்
சூரன்போர் நித்தமும்
சுற்றிவர நிகழ்கிறது.
ஆனால் எவன் சூரன்?
யார்தான் சொல் தேவர்கள்?
ஆறு முகனார் ஆர்?
ஆர் நவ வீரர்கள்?
கேள்விகள் நெஞ்சைக் கிழிக்கிறது!
எல்லோரும்
“ஆறுமுகர் தாம்” என்றார்!
மற்றோர் தான் சூரர் என்றார்!
ஆறுமுகர் யார்? யார்யார்
சூரர்கள் என்பதையும்,
ஏது அறம்?
எவைதான் மும்மலங்கள் என்பதையும்,
யார்தான் தெளிந்தோம்…
யதார்த்தம் குழம்பிடுது!
காலம் நிஜமுரைக்காக் காரணம்
யார் தேறுவது?
சூரன்போர் நித்தம் தொடர்ந்து
தலைவிழத்தான்
சூரன்யார் ? முருகன் யார் ?
சொல்லும் வரலாறு !

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply