நாடு

மாறுபட்ட மனம் கொண்ட
பல கூட்டம் குழு வகையும் ,
வேரறுத்து முதுகினிலே குத்தி
வெளியினிலே
பாசம் பொழியும் உட் பகையும் ,
ஆள்வோனை
உய்ய விடாது உறுக்கி மிரட்டியே
கைமோசக் கொலைபுரியும் கயவரும் ,
இல்லாததுதான்
நாடென்றான் நம் பூட்டன்**!
“நம் நாட்டில் ‘இவை’ மட்டும்
காணப் படுகிறதே….
அன்றிருந்து இன்றுவரை
நாடா இதுகாடா”?
நான்கேட்டேன் ஆண்டவனை!
“‘நாடொன்றில்’ வாழ
நமக்குக் கொடுப்பினைகள்
ஏனில்லை?
எப்பாவம் செய்தோம் இங்கிருக்க?”
என்றேன்
யார்க்கும் விளங்குதில்லை?
“நாடாய் இதை மாற்ற
ஏது செய்ய வேணும் நாம்?”
ஏன் எவர்க்கும் புரியுதில்லை?

நம் பூட்டன்** — வள்ளுவன்

குறள் –735

“பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு.”

திருக்குறள், பொருட்பால், அங்க இயல் , அதிகாரம் –நாடு

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply