கடலாழ மான கவிதைகள் பாடி
ககனத்தை அளப்பானாம் கவிஞன் .
கனவுக்குள் நீந்தி நனவுக்குள் நோண்டி
கவின் நூறு காண்பானாம் கலைஞன்.
விடைகண்டி டாத விடுகதை கோடி
விளையாடி அவிழ்ப்பானாம் அறிஞன்.
விரி கற்பனைக்குள் விதி நூறு கண்டு
விளக்கும் விஞ்ஞானியே அவனும்!
மொழி ஆழி மூழ்கி புது முத்து தேடி
முயன்றள்ளி புவிகேட்க தருவான்.
மொழிகின்ற போது முழு ஊரும் தோய்ந்து
முழுகவே கவி மாரி பொழிவான்.
பழிபாவம் பார்ப்பான்; பசிதாகம் பார்க்கான்;
பணியாத வரலாறாய் எழுவான்.
படை செய்திடாத பணி செய்தெம் மண்ணை
பரிபாலனம் பண்ண முயல்வான்.
பழமைக்கும் இன்றைப் புதுமைக்கும் நாளைப்
பலனுக்கும் பாலங்கள் எனவே,
பலசெய்து பாஷைப் பலம் செய்து பாதைப்
படிசெய்து விதி சொல்வான் அவனே
அழகோடு ஞானம் அறிவள்ளி நல்கும்
அவதாரம் ஆவானாம் தினமே …
அதனாலே பூமி அழிகின்ற போதும்
அழியானாம்…. கவிஞனும் சிவனே!