தெருவெலாம் பொங்க வேண்டும்.
திசையெல்லாம் பொங்க வேண்டும்.
தரிசுகள் திருத்திப் …பஞ்சம்
தரித்திரம் பசியும் சாகும்
வரை..நிதம் பொங்க வேண்டும்.
மழை, வெயில், ஆசி நல்கும்
அருணனும், குளிரு மாறு
அனைவரும் பொங்க வேண்டும்!
சூரியன் மகிழப் பொங்கி,
சுழன்றுமே உழுது சோரா
காளைகள் மகிழப் பொங்கி,
கழனியும் வாய்க்கால் வானும்
காலமும் மகிழப் பொங்கி,
உயிரக்கணம் பசியின் தீயால்
நீறாமல் செழிக்கத் தெய்வ
நிழலுக்கும்…பொங்க வேண்டும்!
பிரிவுகள் மறைய, நெஞ்சின்
பிணக்குகள் தொலைய, போட்டிச்
செருக்களம் சிதைய, தாழ்வுச்
சிக்கல்கள் சிதற, போரால்
கருகிய நிலமும் பூத்துக்
கவின் புது வாழ்வு காண,
வரலாற்றை மாற்றும் கைகள்
வலுக்கொள்ள, பொங்க வேண்டும்!
அறிவெனும் பானை ஏற்றி
அரிசியாய்ப் புதுமை எண்ணம்
சொரிந்து அன்புப் பாலும் ஊற்றி
தொடர் முயற்சித் தீ மூட்டி
மரபுரிமைகள் போன்ற
வெல்லம், கற்கண்டு, தேன்,நெய்,
பருப்பிவை கூட்டிப் பொங்கிப்
படைப்போம் நம் வாழ்வுக் கூட்டி!