எங்கிருந்து வந்தன இந்தப் படைப்புழுக்கள்?
இங்கிருந்தே போனவையோ?
இங்கு நேற்று அழித்தவையோ?
தங்கள் உருமாற்றி தங்கள் குணம் மாற்றி
தங்கள் தடம்மாற்றி
தலையெடுத்து வந்தனவோ?
பட்டிதொட்டி முதல்கொண்டு பாராளு மன்றுவரை
வெட்டி அழிக்கும்
அவற்றினது வீராப்புப்
பற்றித்தான் பேச்சு!
பாதை நடைபவனி,
கற்றல் கற்பித்தல் கருத்தரங்கு,
விழிப்புணர்வுக்
கூட்டங்கள்,
கட்டுப் படுத்தக் கொலைத்திட்டந்
தீட்டல், பலகருவி தீட்டல்,
‘உயிரியலால்’
கட்டுப் படுத்தக் கடன்வாங்கல்,
எனநாட்டின்
எட்டுத் திசையும்…..
எதிரிகள் போல் படையெடுக்கும்
சேனைப் புழுக்களினால் திகைத்துக்
கிடக்குதின்று!
வரலாற்றுக் காலம் முதல்
‘வாய்க்காலின்’ காலம் வரை
முறைக்குமுறை படையெடுப்பு மோதிச் சிதைக்க ….
இன்றோ
புழுக்களது படையெடுப்பு !
புசிக்கும் உணவினையும்
பழிவாங்க யார் ஏவி விட்டார்
இப் படைநகர்வு?
எப்படி மனிதத்தை இலக்காக்கி சாய்ப்பதென்று
அப்போதே தேர்ந்தவருங் கூட
அதிர்ந்து…”அழிக்க
எப்படி வழி” என்று இடிய…,
விதிப்பலனாய்;
முப்போதும் செய்த முழுப்பழியின் புது வடிவாய்;
எப்போதையோ தாக்க
மறுதாக்க விளைவுமாய்;
இப்போது நமை மேய்க்கும்
படைப்புழுக்கள் தாம் …புழுத்து!