கவிதையோ ஒரு சுட்ட ரவையென,
கவிதையோ ஒரு அக்கினிக் குஞ்சென,
கவிதையோ ஒரு நல்ல விதையென,
கவிதையோ ஒரு வீரிய விந்தென,
கவிதையோ துளி அமிலம் விசமென
கவிதையோ மனதில் விழும் சொல்லென
புவியில் நேரடியாய் எம் மாற்றமும்
புரிவதில்லை; தாக்கம் புரிவதும் இல்லை!
கவிதையோ ஒரு சேதியைச் சொல்லிடும்.
கவிதையோ ஒரு நீதியைச் செப்பிடும்.
கவிதையோ ஒரு காட்சியைக் காட்டிடும்.
கவிதையோ புது விம்பமும் தீட்டிடும்.
கவிதையோ மனப் படிமத்தை முன் வைக்கும்.
கவிதை வரைபடம் ஒன்றை உள் தீட்டிடும்.
கவிதை புதுத்திசை போக வழி சொல்லும்.
கவிதை புரட்சித்தீ மூளவே நெய் விடும்.
கவிதையின் பணி உலகினை மாற்றலாய்க்
கருதல் அபத்தம்; அது நல் நிமித்தங்கள்,
அவைகளுக்கான ஆய்த்த சமிச்சை கள்,
அசைவியக்கத்துக்கான அழுத்தங்கள்,
அவலம் போக்க அருளல், இவை நல்குமாம்!
அதனை இரசிப்போர்…அதன் வாசகர் களே
புவியை மாற்ற, புதுமை கொண்டரக் கவிப்
பொருளும் சொல்வழி பொங்கிட வேணுமாம்!