இயற்கை தனது எளிய கரங்களால்
எங்கு எங்கோ நிறங்கள் தொகுத்து தான்
முயலாது தென்றல் தூரிகை யால் தொட்டு
முங்கி எடுத்து மோனமாக மிக
இயல்பொடு வரைகின்ற வகை வகை
எழிலுறை சித்திரங்கள் கோலங்களில்
மயங்கு துள்ளம்! ‘அதற்கு’ நிகர் அதே
மலைக்க வைக்கும் இயற்கைக் கவிமனம்!
இன்று எவ்வாறு எங்கு நிறங்களை
என்ன விகிதத்தில் சேர்ப்பது? கோலத்தில்
என்ன புதுமைகள் செய்வது? என்றேதும்
இயற்கை சிந்தனை செய்து வரையுதோ?
தன்னுள் அக்கணம் தோன்றிடும் கற்பனை
தனை அது அவ்வாறு தான் தீட்டுதோ?
உண்மையில் சுயம்பு இயற்கை! அதற்கிணை
ஊரில் யாருளார்? அது கலை ஞானியோ?
தனக்கு ஏற்ப தரையை கடல் வானை
தாவரங்களை வளர்த்தும் கலைத்துமே
தனக்கு பிடித்திட்ட வாறு யுகங்களாய்
சமைக்கு தியற்கை அழகைத் திசையெலாம்!
கனவில் கண்டதோ…? கற்பனை செய்வதில்
கடவுளோ? நாங்கள் நினைத்துமே பாராத
இனிமை புத்தெழில் இயற்கை படைக்குது!
இன்னும் எத்தனை யுகம் தொடரும் இஃது?