நாளை

கண்ணைத் திறந்து களநிலையை நீபாரு!
மண்ணில் புரண்டு வடிவிழந்து
நம் கொற்றம்
நாளும் பொழுதும் நடுஇரவும்
வந்துபோகும்
யார்யாரோ காலில்
உதைபட் டலைகின்ற
பந்தாக மாறிப் படாத பாடு பட்டிருக்கும்
இந்தத் தருணத்தில்….
இதைமீட்க எண்ணாமல்
வாய்வீரம் பேசி வயிறுமுட்ட உண்டு ஆறி
ஊடகங்கள் ஊடு
உணர்ச்சிகரப் போர்நடத்தி
மெய்யைக் கழுவேற்றி
பொய்யைக் கழுவியூற்றி
எய்யப் பட்டியங்கி
இலாபம் பெறஏங்கி
கையா லாகாது
சிறிய ஒரு கல்லினையும்
வைத்தெதையும் செய்யும் வக்கற்றும்
நம் மனங்கள்
பொய்யில் புரண்டுவாழ்வைப்
போக்குகிற காலமிது!
ஆடிக் களைத்து அசைய முடியாது
வாடிக் கிடக்கின்ற வரலாற்றைப்
புரியாமல்
கால் மண்ணில் வைக்காதும்
ககன வெளி அளைந்தும்
ஆளும் முறை ஊரில் அறியாத
மே(ப) தைகளால்
நாளை எதுநடக்கும்?
நம்மால் எது நிகழும்?
காலம் கழியும்…நம்
கைப்பொருளா அடைவு போகும்?
யார்தான் உரைப்பதின்று?
யதார்த்தம் அழும் தவித்து!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply