ஓலங்கள்

தூங்காத இரவில்,
சூழ்ந்துநிற்கும் மௌனத்தின்
வேரடியில்,
விண்ணை வெறித்திருளில் மூழ்கியொரு
அமைதிக்காய்ச் சாய்ந்திடையில்,
அகம்தளர்ந்து ஓய்ந்திடையில்,
இடையறாது மனச்செவியில்
அதிர்வொன்று கேட்கிறது!
அந்தக் கடற்கரையில்…
அதைச்சூழ்ந்த மணற்சிறையில்…
அந்த அடர்இரவில்…அழிவுக்கு முற்கணத்தில்…
வேறெந்தக் குருவிக்கும்
விபரம் தெரியாமல்,
யார்யார் எனஎவரும் எவர்க்கும் அறிவியாமல்,
எத்தனைபேர் என்ற
கணக்கெதுவும் இல்லாமல்,
கோரமாய்க் கொலையுண்டு
உயிரோடு புதையுண்டு
இரத்தத்தின் சாட்சியம் எரியுண்டு
அழிந்தவரின்
அவலமும் ஓலமும் அந்தரிப்பும் இறுதிக்
கதறலும்
எவரும் கணக்கெடுக்கா நிராகரிப்பு
மௌனமும் மனச்செவியில்
“அசரீரி ஒன்றைப்போல்”
கேட்டென் இதயத்தை
அடிக்கடி கிழிக்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply