ஆயிரம் புத்தி அனைவர்க்கும் சொல்லி
ஆனது என்னதான் முடிவில்?
ஆம்…பிழை செய்தே அடைகிறார் வெற்றி
அதர்மமே ஆழுதெம் திசையில்.
கோயிலில் சூடம் கொளுத்தியும் …பாவம்
கொழுந்து விடுகின்ற நிலையில்
“கோயில் பொருத்தம்…கொள்கையைக் காக்க
குறிவைப்பம்” என்கிறார் பதிலில்!
மனிதருக் காக மரித்தவன் …அந்த
மனிதரின் அறியாமை களைய,
மனிதனாய் மீண்டும் உயிர்த்தெழும் நாளில்
மரணமே வந்தது வளைய,
“புனிதமே இதுவும் புரிக” என் றார்க்க
புவியில் ஆள் உள்ளனர் நிறைய,
பொருளெனக் கேதும் புரியவே இல்லை
பொருமினேன்; என் இரத்தம் உறைய!
தீவிர வாதம் தீ மத வாதம்
திக்கை எரித்தென்ன அடையும் ?
சீறிய இரத்தம் சிதறிய சதையில்
தேடி எப் புனிதத்தை உணரும்?
வாழ்க்கையைக் காட்டும் வழி மதம்…சாவை
வைத்தெதைச் சாதிக்க முடியும்?
வா …மத நேசம் வாழ்கின்ற போதே
மண்ணில் அமைதியும் படியும்!
ஓரிரு வர்கள் ஓர்மத்தில் …மற்றோர்
உயிரைப் பறிக்கின்ற செயலால்
உள்ளவர் முற்றும் உயிரெடுப் போராய்
உரைத்தல் அறமில்லை உணர்வாய் !
ஆர் இடர் தூண்ட அலைபவர் என்றே
அறி; கொடு பதில் மிகத் தெளிவாய்!
ஆம் மதம், சாதி, இனம், மொழி பேதம்
அழி! இ(ல்)லை நீ இனி அழிவாய்!
21.04.2019