தொடர்பு

குளிரோ மயிர்க்கொட்டி மயிர்போலச் செறிவாக
எனது முதுகினிலும் ஒட்டிடுது.
சிலிர்ப்புநதி
முதுகு வழியாய்
முள்ளந்தண் டூடசைந்து
பரவி உடல்முழுதைப்
பனிக்கட்டி ஆக்கிற்று.
இறுகி ஒடுங்கி இருகை உரஞ்சுகையில்
பொறிபறக்க அளவாய்ப்
பொங்கிவரும் வெப்பமொரு
கணகணப்பை இந்தக்
கடுங்குளிருள் மூட்டிடுது.
பெருங்குளிரைத்…
துளியாய் விழுந்த சிறுவெப்பம்
கரையவைத்த மாயத்தைக் கண்டேன்!
உனதொருசொல்
சிறுதுளிச் சூடாய்க்
கவலைக் குளிர்க்கடலை
கரையவைத்த போது…
உனக்கும் இயற்கைக்கும்
இருந்த தொடர்பு எதுவென்று
கண்டுகொண்டேன்.!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply