புறாவின் உடல் எடைக்கு பொருளாக
தன் தசையை
அரிந்தீந்த ‘சிபி’ போல
அருளும் வலிமை இல்லேன்!
எனது உடலினிலோ இதயத்திலோ பிய்த்து
உனது சிதைகின்ற உயிர் நிரப்பிப்
பழுது பட்ட
உனது இதயத்தை
இயக்கும் முறை தெரியேன்!
நரம்பினையோ இரத்த நாடியையோ
எலும்பினையோ
அறுத்து உனது குறை போக்கும்
வழி அறியேன்!
என்னையன்றி…
செல்வம் எதுவுமில்லா ஏழையானேன்!
என்னால் முடிந்தது என்குருதியில் கொஞ்சம்,
என்னால் முடிந்தது என்மூச்சினிற் கொஞ்சம்,
என்னால் முடிந்தது என்நிழலினிற் கொஞ்சம்,
என்னால் முடிந்தது என்சுகத்தினிற் கொஞ்சம்,
என்னால் முடிந்தது என்உணர்ச்சியிற் கொஞ்சம்,
என்னால் முடிந்தது என்அறிவினிற் கொஞ்சம்,
என்னால் முடிந்தது என்கவியினிற் கொஞ்சம்,
என்னால் முடிந்தது என்இசையினிற் கொஞ்சம்,
தந்துன் வறுமைநோய் தணிக்க
முயலுதலே !
உடுக்கை இழந்தவனின் ஒருகைபோல்
அவசரத்துக்(கு)
உடுப்பாவே னே அன்றி
உனக்கு எதும் செல்வம் ஈந்துன்
திடம் காக்கச் சக்தியிலேன்!
‘சராசரிச்’ சிநேகிதனே
பிடிக்கா தெனை உனக்குப் புரிவேன்;
நான் என்செய்வேன்?