ஈரவிழி ஓரம் ஏறுதொரு சோகம்
ஏன் துடைக்க யாருமில்லை பாரு?
ஏங்கிவிழும் போதும் எண்ணி அழும் போதும்
ஏன் அணைக்க தோள்களில்லை கூறு?
பாரமனம் தன்னை பார்த்து சுமைதாங்க
பார்த்துணைவர் ஏன் வரலை கேளு?
பாதிவழி போனோம் மீதிவழி போக
பாதை உரைப்பார் எவர்கள் தேறு!
யாவரது சாபம்? யாரின் பழி பாவம்?
யாம்நிமிரக் காலம் விட வில்லை.
யாசகமும் செய்து யார்க்கும் அடி சார்ந்து
யாம் தொழுது தாழ்ந்தது எம் எல்லை!
நீள வரலாறும், நீதி மொழி, நூலும்
நேர்க்கலையும், பாரை வெலும் போதும்
நெஞ்சில் உரமின்றி நீறி…வலியோர்முன்
நித்தம் தொலைத்தோம் எமது சொல்லை!
ஒற்றுமைகள் அற்றோர் கொள்கைகருத் தற்று
ஓர்நூறு பிரிவு பிளவுற்று,
உள்ளொன்று வைத்து புறமொன்று ரைத்து
உண்மைக்கும் விசுவாச மற்று,
கற்ற நெறி விற்று தன்னலமே பெற்று
கண்ணியம் நம் வாழ்வில் விழ விட்டு,
காலமது மீட்கும் என்றிலவு காத்தோம்….
கரைசேர்க்க வில்லை விதி…தொட்டு !
25.03.2019