வெடிகள் அதிர்ந்தாலும் இடிகள் விழுந்தாலும்
விடிவின் ஒளிக்கீற்றைக் கண்டோம் –ஒரு
விடியல்… இருள்சூழ்ந்த பொழுது கனவோடு
விழிகள் குருடாகி வெந்தோம் !
அடிகள் விழும் மேலும் கொடிகள் அறும்…மீள
அருள துணையின்றி நொந்தோம் –முழு
அழகு தொலைந்தின்று அடிமைச் சுகம் கண்டு
அசந்து துயில் கொள்ளு கின்றோம் !
பிரித்து அரசாள… பிரிந்து பகைமூழ
பிணங்கி பலநூறு துண்டாய் –‘இனப்
பெருமை’ தடுமாறி பிழையின் வழிதேடி
பிதிர்கள் என வாடும் …கண்டாய்!
சரிந்து விழும் போதும் எரிந்து விடவில்லை
சரிதம் வரந்தந்த திந் நாள் –புவித்
தருமம் பதில் கேட்கும் தரணி வழிகாட்டும்
தழைக்கும் தமிழ் …சேர்ந்து நின்றால்!
அழுது அழிகின்ற அயலில் சிரிப்பென்னும்
அமுதம் கடைந்தள்ளிக் கொள்ளு! –தினம்
அதிரும் துயரங்கள் அனலில் விழ…ஏதும்
அதிசயம் செய்து வெல்லு !
தொழுது கெடும் துன்பம் தொலையும் திருநாளை
துணிந்து வரவேற்க நில்லு –எம்
துயரில் குளிர்காயும் துரைகள் அழ …நீதித்
துணையும் பெறு …தீர்ப்பு சொல்லு !