வீசி நுரை வீசி அலை மூசி விளையாடும்.
வீடுவரை தேடிவரும் தென்றல் சுகம் கேட்கும்.
ஓசை கடலோசையுடன் மீன்களது பாட்டும்
ஓடங்களின் கானங்களும் கூடும்…சுதி சேரும்!
அந்திவெயில் அலையிலையில் தங்கம் பரிமாற,
ஆழ்கடலும் வானும் அணைத்தே கலந்து கூட,
மந்தையென வந்தமுகில் தீப்பிடித்து நீற,
மாய்ந்து கதிர் இரத்தம் சொரிந்தான் இரவு சூழ!
தூண்டில் தவம் செய்து…முள்ளில் மீன் வரமும் வாங்கி,
தோணிகளில் ஆடி வலை வீசி இடர் தாண்டி ,
நீண்ட மழை சீண்டும் குளிர் தாங்கி கடல் நோண்டி,
நித்தம் பிழைப்போரிடரை சாய்த்த தெவர் தோன்றி ?
கோடிவளம் சூழ்ந்த கடல் கொள்ளை எழில் விஞ்சும்.
கொஞ்சும் அலை நம்பும் உனக்கா அருளும் பஞ்சம்?
தேடி வளம் ஈயும் கடல்… தாயின் மடி! நீயும்
சேர்ந்து தினம் காத்ததில்லை…செய்வது ஏன் துரோகம்?
சேறு நெடி வீசும் கரை ஓரம் வரு வாயா?
சீர் கெடுக்கும் குப்பை….கடற் சேலை உரிவாயா?
மீறும் பொலித்தீன் வகைகள் மீட்க மறப்பாயா?
மீனுடன் நாம் மாள… பல தீமை கரைப்பாயா?