மனிதனாய் வாழ்தல்

மண்ணிலே மாணிக்க மாமலை போல நீ
மாண்புகள் காணலாம் மனிதா
வானமும் வையமும் வாழ்த்திட…வானவர்
மாலையும் சூடலாம் மனிதா
எண்ணிய யாவையும் எய்திடும் மேன் நிலை
எட்டலாம் நீயடா…மனிதா
என்றாலும் மனிதனாய் என்று நீ வாழ்கிறாய்
என்பதே வென்றிடும் மனிதா!

கோடிகள் சேர்ப்பதும் கோவில்கள் காப்பதும்
கோஷங்கள் வெல்வதும்…சிறிதே
கூவி அடக்கலும் குத்தி முறித்தலும்
கொன்று குவித்தலும் …சிறிதே
மாடங்கள் மாளிகை செய்வதும்….மாண்புகள்
மண்ணில் படைப்பதும்… சிறிதே
மானுடம் போற்றிடும், மனிதம் ஒளிர்ந்திடும் ,
மனிதனாய் வாழ்வது…பெரிதே!

ஆயிரம் ஆயிரம் வாழ்ந்து மடியுது
ஆர் பெயர் யாருக்குத் தெரியும்?
அடிமுடி கண்டவர் அதிசயம் செய்தவர்
அரசில் உயர்ந்தவர் கதையும்
போயிற்று காலத்தில்…! போச்சு வரலாற்றில் !
போலியில்லா ஈகை மனிதம்
பூக்குமாம் வாடாது; புயல்மழைக் காடாது
பூமியில் சாகாதெப் பொழுதும்!

27.03.2019

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply