சரித்திரம் சென்று சாம்பலாய் அன்று
தாண்டு கரைந்தது கடலில்.
தலைமுறை ஒன்று தலை, விலை தந்து
தவறிற்று வாய்க்காலின் கரையில்.
பெரும்துயர் நனவு பிய்த்த…எம் கனவு
பேச வார்த்தை அற்ற நிலையில்
பிணி நிதம் சூழ பிளவுகள் கூட
பிழைக்குமா தப்பி இன் றுலகில்?
நினைவுகள் இன்று நிலைகுலைந்தே தான்
நெஞ்சைவிட் டகலவும் இல்லை.
நிமிர்ந்த நம் கொற்றம் குனிந்து பத்தாண்டு
நீண்டது…மீண்டெழ வில்லை.
கனவினில் கண்ட கவின் மிகு வாழ்வை
காண நிஜ வழி இல்லை
கதி எதுவாகும் ? விதியொடா மாறும் ?
கையறு நிலை விழ வில்லை.
வரங்களை வேண்டி வலிகளைத் தாங்கி
வரலாறு வாழுது இன்றும்
வசந்தமே தேடி வரண்டுமே வாடி
மனங்களும் நீறுது என்றும்
பொருள் இழந்தோடி உயிர் சுமந்தாடி
புன்னகைக் கேங்குதே மண்ணும்
பூச்சியம் ஆன தினம்….நெஞ்சின் ஆறாப்
புண்ணுக்கு மருந்திடும் திண்ணம்!