பகைமை என்பது பகைமையால் தீர்ந்ததாய்
பாரில் சம்பவம் சரிதம் எதுமில்லை.
பகையை மேலும் பகைத்து வளர்ப்பதால்
பாவம் பழி மிகும்; யாரும் உணரலை!
பகையுணர்வு சிறு பொறி யாகவே
பதுங்கினும்…ஐயம் கோபமாம் காற்றுகள்
புகையை மூட்டி எரித்துப் பொசுக்குமாம்!
போரைத் தூண்டுமாம், சாவைப் படைக்குமாம்!
வாழ்க்கைக் குப்பை மேட்டில்…பகைப்பொறி
மறைந்தடியில் கிடக்கும் வரை…அது
நாளும் புகையும்; இடைக்கிடை தீப்பற்றும்;
நன்கு…நீரினைக் குப்பை மேட்டின் மேலே
வீசி இப்பொறி நூராது! குப்பையை
விழுத்திப் புரட்டி அடிப் பகைப் பொறியிலே
நீரைப் பீய்ச்சி அடித்து அணைத்திடில்
நிரந்தரப் பகை நெருப்பும் அணையுமாம்!
பகைமை வீழ்த்தப் பகைமை பாராட்டுதல்
பண்பு அல்ல…ப (வ)ழக்கம் அதுவல்ல!
பகையை நூர்க்க குறித்த முறைகளைப்
பயன்படுத்தினும் மிஞ்சிடும் தோல்வியே!
பகை மனங்களில் அன்பு நீர் தூவியே
பகல் இரவெலாம் காயாமல் பார்த்திடில்
பகைத்தணல் நூரும்! பாசம் துளிர்த்திடும்!
பகைமை வீழ்த்திட அன்புதான் ஆயுதம்!