காலடி பதிக்கக் கனவல்ல நனவென்று
காற்றின் குளிர்ச்சி
குளிர்ச்சாரல் தூவிநின்ற
வேளை …’அமைதி ஞாபகார்த்தப் பூங்காவின்’
வாசலில் எனைக்கிள்ளிப் பாரத்துச்
சிலிர்த்த படி
உள்நுழைய….பரவசம் உருமாறி
ஒருசோக
வெள்ளம் புரண்டு, தொடர்ந்து கண்ணீரின்
துளிகள் கசிந்து, விசும்பல் பெருமூச்சும்
அழுகையும் எழுந்து,
அதிர்வும் மனவலியும்
பீறிப் பெருகிற்று!
“என்ன பிழை பழியைத்
தானிவர்கள் செய்தார்கள்“?
விடிகாலை தரைதொட்ட
வெடிகுண்டு வெடிக்க வெப்ப அனல் கிளம்பிற்றாம்!
முப்பது பாகைக்கே முணுமுணுக்கும் இக்காலம்…
மூவாயிரம் பாகையில்
முழுதும் கருகிற்றாம்!
இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டம் இடுகாடாய்
எரிந்துமே சாம்பலாச்சாம்!
எழுந்த ‘காளான் வடிவ’
புகைமூடிச் சூழல் புதைந்ததாம்!
சிலநொடியில்
பொழிந்தது ‘கருப்புமழை’
துளி ஒவ்வொன்றும் அனல் துண்டாய்
விழுந்த உடல்கள் வெந்து ஊன் உருகி ஓட
கதிர்வீச்சால் எல்லாமும் கருகி
உதிர்ந்துபோச்சாம்!
இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டம்
வெறும் சாம்பல்
கிடங்காச்சாம்!
இந்தக் கொடுமைகளை மனுக்குலமே
கண்டின்றும் துடிதுடிக்க….
“காணும்” இதுபோல் என்றும்
இந்தப் பூமிக்கு எப்போதும் வேண்டாமே
என்றுநின்று அஞ்சலித்து,
இன்றைக்கும் அவ்வழிவின்
சாட்சியான கட்டடத்தை தூபிகளைக்
கண்டதிர்ந்து,
“ஆட்சேபம் எப்போர்க்கும்” என்று எனக்குநான்
அறிவித்து,
ஆறாது அகமெல்லாம் பாரமொடு,
திரும்புகிறேன்!
அன்று வெறும் சாம்பல் சுடுகாடு
இன்று தலைநிமிர்ந்து
அமைதியின் பெறுமதியை
சொன்னபடி நின்றிருக்க…
அழிவுக்குள் தலைநிமிர்ந்து
இந்த உலகையே திகைக்க வைத்த
அழிவுமண்ணின்
விந்தை மனிதர்களை, விடா முயல்வை,
மனவலியை,
ஒன்றாக நின்று உயர உழைத்து உய்த
முன்னேற்ற முறையை, வியந்தபடி
என்மண்ணை
எண்ணுகிறேன் …இன்னும் எத்தனை நாள்
வேண்டுமோ
சின்னத் தனம் விட்டு திரண்டு
இவர்கள் போன்று
சொரிந்த சாம்பல்மேட்டில்
சொர்க்கம் சமைப்பதற்கு?
பெருமூச்சு எழுகிறது….
மனபாரம் பெருகிடுது!
“அமைதி ஞாபகார்த்தப் பூங்கா’ – ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு வெடித்த இடத்தில் உள்ளது