கிடைத்ததை வைத்து வாழத் தெரியாது
கிடைத்ததைக் கொண்டு வாழ்வை விளைக்காது
கிடைத்த நன்மையால் மாற்றம் வளர்க்காது
கிடைக்காத ஒன்று என்றோ ஒருதினம்
கிடைக்கும் கிடைக்கும் என்று நிதம் காத்துக்
கிடந்து…வாழ்க்கையை முற்றாய்த் தொலைத்தெதும்
கிடைத்திடாமலே வாழ்வை முடிக்கிறார்!
கிடைத்ததை வைத்து வாழப் பழகிடார்!
கிடைக்கும் இலவச மாக எதுவுந்தான்
கிடைக்கும் என்றெதிர் பார்த்து…நிவாரணம்
கிடைக்க வாழ்ந்தபோர் நாள்போல் தொடர்ந்து தாம்
கிளைகளோடு சும்மா இருந்து…தன்
உடலுழைப்பை மறந்து….முயலாமல்
உடனடி இலாபம் தேடத் தவித்தெதும்
திடமொடு செய்யா தலைந்து….கிடைக்குமாம்
திருவெலாம் என நிற்போர்க் கெது வாழ்வு?
போது மென்ற மனது பொன் செய்திடும்
பூரண மருந்தென்று புரிவதும்,
ஏது கிடைக்குதோ அதை வைத்துச் செம்மையாய்
இருக்கப் பழகலும், அதைக் கொண்டுயர்ந்திடத்
தோது ஆன துறையில் முயல்வதும்,
தொலைக்காது நிகழ் காலத்தை வாழ்வதும்,
போதை, கற்பனை விட்டு யதார்த்தத்தைப்
புரிவதும் கூட வெற்றி இரகசியம்!