காலைப் பொழுதுகளை கனக்கும் சுமையாலல்லாது மனப் பாரத்தை இறக்கி வைக்கும் ஆறுதல் போல ‘எழுதாத ஒரு கவிதை’ என்ற கவிதைத் தொகுப்பினை அழகான எளிய நடையில் த.ஜெயசீலன் உலவ விட்டிருக்கிறார். வாழ்வின் சகல திசைகளிலும் நகரும் இவரது கவிதைகள் நிலத்தில் ஆழ வேரோடுவது போல வாசிப்பவர்களின் ஆழ்மனதில் வெவ்வேறு உணர்வுகளை ஏற்படுத்துகின்றன.
தொகுப்பின் அனைத்துக் கவிதைகளும் அடுத்தது என்ன என்று வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதைகள் கனதியான, இனிமையான களமாக அமைகின்றன.
‘தமிழுக்காய்த் தம்மை விதைத்தவர்க்குப்
பாயாய்க் கிடந்த தரை
பாய்ந்து தொடர்ந்தழித்த
பேய் யுத்தத்தாலும் பெரிதாய்க் குலையாமல்
மீள் எழுச்சி பெற்று
விதி செய்த மேன்மைநிலம்’
என்ற கவிதை வரிகள் ‘ஞானமடி’ என்ற தலைப்பிலான கவிதையில் வருகிறது. நமது நிலத்தின் வரலாற்றைச் சொல்கிறது. போர் அழித்தாலும் நிலம் அழியாது மீளும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.
‘மனக்கலக்கம் மாற்றும் மருந்து’ என்ற தலைப்பிலான கவிதையில், நடைமுறை வாழ்க்கையில் மாற்றம் ஏற்படின் குழப்பம் ஏற்படும். இதுவே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமையும். பிரச்சனையை உருவாக்கினால் அந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும் வரை அமைதி இருக்காது என்பதை அழகாக இயற்கையோடு ஒப்பிடுகிறார் கவிஞர். அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் ஒரு தீர்வு இல்லாமல் தொடர்கின்றன என்ற தத்துவம் ‘நேற்று இருந்தது இன்று இல்லை’ என்று காற்று வரும் காலம் என்ற கவிதையின் கடைசி வரியானது.
‘மௌனத்தின் அர்த்தம்’ என்ற கவிதையின் கடைசி வரி
‘மௌனம் ஒருஇடத்தில் மலிந்து கிடக்கென்றால்
எத்தனையோ அர்த்தம்
அதற்குள் இருந்திடலாம்’ என்று அமைந்துள்ளது.
அதாவது போர் தோல்வி கண்டபின்னர் ஏற்பட்ட அமைதி எத்தனையோ பேரை மௌனமாக இருக்க வைத்துள்ளது என்கிறது.
போரினால் எமது மண்ணில் ஏற்பட்ட இழப்புக்கள், போர் முடிவடைந்ததும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதை ‘உயிர் தொலைத்தல்’ என்ற கவிதையில் கவிஞர் வெளிப்படுத்தியருக்கிறார். இதைப் போன்ற இனிமையும், சொல்லர்த்தமும் கொண்ட பல கவிதைகள் பக்கங்களை நிரப்புகின்றன.
ஜெயசீலனின் இந்த மூன்றாவது கவிதைத் தெகுப்பு வாசகர்களை, கவிதை ஆர்வலர்களை பாட வைக்கும்ளூ பாடமாக்க வைக்கும்.
(இந் நூல் அறிமுகக் குறிப்பு 03.07.2013 ‘உதயன்’ தினசரியின் ‘நூல்நயம்’ பகுதியில் வெளிவந்தது)