‘நாலரைக்கு’ நல்லூரின் மணியின் நாதம்
நாற்திசையைத் துயிலெழுப்பும்! சேவல் கூட
பாடும் ‘பள்ளி எழுச்சியின்’ தேன் பாடல் கேட்டே
படபடென்று எழுந்து கூவும்! கிழக்கில் மெல்ல
ஊறிவரும் ஒளி…இருளோ டூடல் செய்யும்!
உயிரை …வரும் குளிர் காற்று வருடிச் செல்லும்!
பூசையெழும் …தீபத்தால் மூலஸ் தானம்
பொன்விடிவை அயலுக்குப் பரிசாய் நல்கும்!
வானுயர்ந்த கோபுரங்கள், விசால வாசல்
மண்டபங்கள், அமுதூறும் கேணி, மாட
வீதியெங்கும் தெய்வாம்சம் சுரக்க…. சொர்க்க
விழாநாளின் புலர்வில் இளம் பக்தர் கூட்டம்
வீழ்ந்து ‘அங்கப் பிரதஷ்டை’ செய்ய….தூங்கும்
விண் விழிக்க “அரோகரா” என் றெழுமாம் கோஷம்!
வேலவனின் கால்நடக்கும் குளிர்ந்த சுற்று
வீதி மணல் பட…உடல்கள் புனிதம் பூணும்!
“பட்டாடை நகை மினுங்க வருவோர் தானே
பலர்” என்பீர்…இல்லையில்லை விடி வின் முன்னே
கிட்டவந்து பார்ப்பீரேல் கிறங்கிப் போவீர்!
கிலுகிலென்று இளம் அடியார் பல்லோர்…திக்கு
எட்டினிலும் திரண்டு தம் தம் நேர்த்தி தீர்ப்பார்!
இதயம் மெய் கனிந்துருண்டு சிலிர்த்து நிற்பார்!
தொட்டு வெயில் சுடும் முன்னர்…ஆன்ம ஞானம்
சுவைத்தகல்வார்….நம் மரபை எவர்தான் சாய்ப்பார்?