கால காலமாய் வாழு கின்றவா!
காற்று மூச்சையும் ஆளுகின்றவா!
கோல மாமயில் ஏறி… எண் திசைக்
குற்றப் பாம்புகள் கொல்லுகின்றவா!
வேல் தரித்தவா! சூர…மும்மலம்
வீழ்த்தி நெஞ்செலாம் சாந்தி சேர்ப்பவா!
‘நாலரைக்’ கெழுந்தூர் மனங்களில்
ஞான மூட்டிடும்….நல்லை வேலவா!
உந்தன் வீதியில் ஊர்கள் கூடிட,
உன் திசையெல்லாம் பக்தி பூத்தெழ,
உந்தன் ஆலய மணிகள் ஆர்த்திட,
உந்தன் மேனியில் பொன் குவிந்திட,
மந்திர குழல் மாய மத்தள
மாரியில்…நிலமே குளிர்ந்திட,
உந்தனின் கொடி ஏறியுள்ளது!
உயிர்கள் உன் விழிப் பார்வைக் கேங்குது !
‘வாகனங்களில்’ வந்து சொல்லுவாய்.
மஞ்சம், வேல் விமானம், சப்பறம்,
தேரில், நின்று நீ தீமையோட்டுவாய்.
தீர்த்தம் தந்துமெம் பொய் கழுவுவாய்.
காவடியொடும் ஆடி வாழ்த்துவாய்.
கற்புரச் சுடர்க்குள்ளும் தோன்றுவாய்.
நீ… திருவிழா நாளில் எங்களின்
நிழலும் பரவசம் பெற…அருளுவாய்!
சோதனைகளை வேதனைகளைச்
சுட்டெரித்த நின் சொர்க்க வாசலில்
சோதனைகளேன் இன்னும்? உன்னடி
தொழத் தடைகளா இன்றும்? எங்களின்
பாதையில் ஒளி பாய்ச்சும் உன்விழி
பயம் விரட்டணும் என்றும்! மண்ணிலே
தீதெலாம் அகன்றோட …உன்னருள்
சேர…இன்பமே தேற …நேருவம்!