எல்லை அற்ற நல்லருள் சுரப்பவா
ஈடிலாப் பெரும் அன்பு கொண்டவா
தொல்லை சூழ்ந்திடும் போத ரூபமாய்த்
தோன்றி…அன்னதின் சென்னி கொய்பவா!
செல்லம் தாறவா, செல்வம் தாறவா
செந்தமிழ்க் கக லாத காவலா
நல்லை வாழ்ந்திடும் நாயகா…உனை
நம்பி நிற்கிறோம்…உய்ய வையடா!
ஓர் கலங்கரை யாய் உன் கோபுரம்
ஊர்ச் சனக்கடல் துயர் அலையிடை
நீந்தையில் கரை சேர்த்த ணைத்திடும்.
நீழல் வீதிகள் நிம்மதி தரும்.
தீர்த்தக் கேணியோ நோய்கள் தீர்த்திடும்.
தெய்வ ஞான வேல் மாயை போக்கும்…நம்
வேரைக் காக்கும் நின் கோவில்…நல்லையில்
வீழ்ந்தெ ழும்பிடின் முக்தி நிச்சயம்!
ஞானி மார், பல சித்தர், யோகிகள்,
நாட… ஆன்ம அதிர்வெழுந் தின்றும்
ஊறும் சூழலும், உள்ளம் யாவையும்
உள்ளுருக்கி மெய் காட்டும்…வேல் உறை
மூலஸ்த் தானமும், மூர்த்தி தீர்த்தமும்,
மோனமாய் நிகழ் கின்ற அற்புதம்
நூறும்..,நேர்த்தியும், கீர்த்தியும், நிதம்
நொந்த மானுடர் தம்மைத் தேற்றுமாம்!
யாழின் பண் விழா, யௌவன விழா,
யாவரும் அருள் அள்ளும் பொன் விழா,
ஈழச் சைவத் தமிழுக் குயிர்ப்பூட்டும்
எழிற் திருவிழா, எவ்விடர் தீண்டிய
வேளையும் விழா..மேன்மை கொள் விழா!
வெல்லும் இந்த முறையும் வேல் உலா!
சூழும் நல்லையின் சொர்க்கச் சீர் விழா!
சொல்லும் நல்வழி ஊர்க்கு….நம் விழா!