திருநல்லை தனில் வேலன் கொடியாடுதே –நான்கு
திருக்கோபுரங்களிலே அருளூறுதே
வரலாறு வளமைபோல் கொடியேற்றுதே –நல்லை
வடிவேலெம் மரபுக்கு முடிசூட்டுதே!
விடிகாலை ஒளிபோல அருள் பூசுவான் –எங்கள்
விரதங்கள் தமை ஏற்று வழிகாட்டுவான்
முடியாத இடர்தீர்த்து முதல் நீட்டுவான் –எங்கள்
முகம் மின்ன அகம் தன்னில் மகிழ்வூட்டுவான்!
மணியோசை திசைதிக்கை உசுப்பேற்றிடும் –ஈசன்
மகன் பார்வை பட ஊரில் இருள் நீங்கிடும்
பிணி நீக்கும் பெருமானை நிதம் நம்பிடும் –எந்தப்
பிறவிக்கும் அவன் தீர்த்தம் அமுதாகிடும்!
துணையான இரு தேவியரும் சேர்ந்தெழ –நெஞ்சால்
துதிபாடும் அடியார்கள் புடைசூழ்ந்திட
இணையற்ற அழகோடு அருள் சிந்திட –வேலன்
இருவேளை வருவானே எமைத்தேற்றிட!
தினந்தோறும் புதுமைகள் தரும் கோலமும் –எங்கள்
திசை திக்கிற் குயிர்ப்பூட்டும் மயில் வேலதும்
கனவோடும் கதைபேசும் திரு வாயதும் –நல்லைக்
கதிர்வேலன் தனித்தன்மை தனை ஆர்த்திடும்!
விதி தீட்டும் கதை கல்லில் எழுத்தாகலாம் –கந்தன்
விரல் பட்டு அதுமாறி நலம் சேர்க்குமாம்!
சதி செய்து கிரகங்கள் நமை யாட்டலாம் –ஐயன்
தயை…கோளில் கடிவாளம் இடும்; காக்குமாம்!
தொடர்ந்தெங்கள் குலம் ஓங்க நிழல் நல்கியே –சூழும்
துயர் வெல்லத் துணை…நல்லை அரன் தாள்களே
தடை நாளை வரும் போதும் பொடியாக்கியே –ஈழத்
தமிழ் வாழ்வைக் கரையேற்றும் குகன் கைகளே!