அருளூட்டி அரசாளும் தேவன் –ஞான
அழகூறும் தமிழ் மண்ணின் சீலன்
பொருளோடு புகழ் கூட்டும் பாலன் –நாளும்
புதுமைகள் தரும் நல்லை வேலன்!
உயிரோடு உறவாடி நின்று –ஊரின்
உணர்வுக்குள் குடியேறிக் கொண்டு
அயல் உய்ய கொடியேறி இன்று –வேலும்
அவலங்கள் சுடும் சுற்றி வந்து!
திருநாளில் தெரு சொர்க்க மாகி –நல்லை
திசைமூடி அடியார்கள் கூடி
வரும் வேலைப் பணிந்தின்று பாடி –கேட்டு
வரம் கொள்வர்…புனிதங்கள் பூசி
தவிலோசை குழலோசை யோடு –ஈரத்
தமிழோசை குளிரூட்டும் பாரு
கவிதைகள் பொழியும் ஊர் நாவு –கந்தன்
கரைந்தன்பு தர…நாளும் நேரு!
வழியெங்கும் குகன் பாதம் போகும் –எங்கள்
மனதோடு அவன் வாயும் பேசும்
விழி நீரில் நனைந்தந்த நேரம் –வேலன்
விளையாட்டில் பெறும் நூறு ஞானம்!
அரசர்க்கு எளியோர்க்கு ஒன்றே –சட்டம்
அனைவர்க்கும் அருள்வானே நன்றே
பெரு நல்லை பதி வாழும் அன்பே –எங்கள்
பிழைபோக்கி அணை நீழல் தந்தே!