தேரோட்டம்

தேரசைந்து வாற நேரம் திசைகள் வேர்த்திடும் –நம்மைத் 
தேடி ‘ஆறு முகர்’ கிளம்ப ஆன்ம அதிர்வெழும்.
ஊர் உலகம் கூடி நல்லை வீதியில் விழும் –தேரும் 
ஓட…கற்களாக எங்கள் இடர்கள் பொடிபடும்!

காலைமுதல் நேர்த்தியோடு பக்தர் சேருவார் –வேலன் 
காலில் வீழ்ந்து கதறி …சோகம் ஓட்ட ஏங்குவார்.
போலியற்ற உளங்களை தான் கந்தன் தேடுவான் –அன்பர் 
பொய் துடைத்து சண்முகன் ஊர் புனிதமாக்குவான்!

வாகை மாலை ஆட சேவற் கொடிகள் மின்னிட –அன்பர் 
மலை மலையாய் சிதறு தேங்காய் அடித்து ஆர்த்திட 
மேள தாளம் மணி பஜனை காவடி தொழ — ஆடி 
வெளியில் ‘சண்முகர்’ வருவார் …ரஜோ குணம் எழ !

சூழல் மாறிப் போகும் தேரும் ஓடும் நாளிலே –எங்கும் 
சூழும் தெய்வீக வாசம் நாம் கிறங்கவே!
மூடும் கற்பூர சுடரும் புகையும் எங்குமே –வேலன் 
மூட்டுவானாம் ஞான வேள்வி தேரில் சுற்றியே!

தேர் இருப்பு வாற மட்டும் பொங்கும் ஆக்ரோஷம் –எழிற் 
தேரில்…குகன் முகத்தில் எழும் யுத்த சன்னதம் 
ஆறி ‘பச்சை சாத்தி’ மீண்டு …அபிஷேகம் ஏற்றும் –கோபம் 
அடங்க…நம்மை ‘அடித்துப்போட்ட’ அயர்ச்சி ஆட்கொ(ள்)ளும்!

திருவிழாவில் தேர் சிறப்பு…சீர் பெருக்குமாம் –எங்கள் 
திசையில் வாழும் தீமை முற்றும் அழிக்கும் தொழில் இதாம் 
அறுமுகனின் பார்வை பட்டே ஊர் ஒளிருமாம் –நல்லை 
அழகுத தேர்ப் பவனிக்கீடு இணை இருக்குதா?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply