வேட்டை

வாளை எடுத்து நல் வேதியர் –முன்னே 
வந்து கம்பீரங்கள் காட்டிட –திரு 
வேல்கள் பிடித்து நிரையென –பலர் 
வீறுடன் தோன்றித் தொடர்ந்திட –கொம்பு 
பேரிகை ஆர்க்க தவில் குழல் –பரிப் 
பீடுக் குளம்பொலி போலெழ –திமிர் 
ஏழு குதிரை அணிநடை –தனில் 
ஏறினான் வேலன் புவிதொழ!

போர்முகம் அன்ன அணிநடை –சுற்றிப் 
புழுதிப் படையாய் அடியவர் –தெய்வப் 
போர்க்களம் ஆனது வீதியும் –பெரும் 
போர் மன்னனாகினான் கந்தனும் –புகழ் 
ஆர்ப்பொலி பொங்க துணைவியர் –சூழ 
ஆரோகணித்துப் பரிகளில் –நல்லை 
‘ஓர் முகப்’ பொன்விழா தன்னிலே –புது 
உதாரணன் ஆனான் கடம்பனே!

வேட்டைத் திருவிழா என்பதில் –வேலின் 
வீரத் திரு உலா வந்தது –திரு 
வேட்டைகள் ஆடி விலங்குகள் –விழ 
விந்தைகள் கோடி பொலிந்தது –குகன் 
வேட்டைகள் ஆடினான் நெஞ்சினை –மன 
வினை அற ஏவினான் வேலினை –தமிழக் 
கோட்டையைக் காக்கும் குமரனை –பணி 
கூற்று நெருங்காதெம் வீட்டினை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply