சந்தன வாசமும் செந்தமிழ் வேதமும்
தண் மணி நாதமும் தவழும்.
சங்கொலி, தேன் குழல், சந்தக் கவிஇலயம்,
சல்லாரியால் இசை மலரும்.
மந்திர கோஷமும் கற்பூர தீபமும்
வருடவே ‘உள்ள’ நெய் உருகும்.
வள்ளி தெய்வானையும் வர எழுந் தருளுவாய்
வழியெங்கும் தெய்வீகம் பரவும்.
விந்தைகள், அதிசயம், வெவ்வேறு அற்புதம்,
வீதியில் நித்தியம் நிகழும்
வேறிடம் தனிலில்லா ஆன்ம அதிர்வென்றும்
மேவும்…நல்லூரடி முழுதும்.
சுந்தரக் குகன் ஒளி சூழும் இருள்சுடும்
சூழலில் பரவசம் பெருகும்
சொக்கி மரங்களாய் நிற்பம் யாம் வேல் முகம்
சூரியன் போல் வரம் அருளும்.
என்னதான் துன்பங்கள் எத்தனை எப்படி
எவ்விதம் வந்தாலும் கவலை
ஏனுனக் கெண்ணடா ஈசனின் மைந்தனை
இடறவைப்பான் சோகப் புயலை.
மன்னவன் வாழ்கிற மண்ணிலே கால் பதி
மானாகும் உன் மன முதலை
வாய் விட்டுக் கேள் வரம் நோய் பட்டுப் போய் விழும்
வான் தொழும் உன் பெயர் புகழை!
கன்னத்தில் ஏன் கங்கை? கந்தனை நம்பிடு
காத்தனன் அன்றெங்கள் உயிரை
காத்திடுவான்
நாளை கொற்றம் குடிகளை
காலமும் மீட்குமெம் எழிலை.
இன்தமிழால் தொழு; மெல்லிசை பெய்திடு
இரசிப்பானவன்
உண்மை மனதை
இன்னுமின்னும்
நூறு சந்ததிக்கும் நல்லை
இறைமகன் நல்குவான் அருளை!