கண்ணீரின் மழையிலே ககனங்கள் நனையவே
கவிஞானி பா இசைத்தான்.
கற்பனை ஆழியில் அற்புதம் பலநூறு
கவிமகன் மீட்டெடுத்தான்.
விண்ணோரின் வாழ்க்கையின் மேன்மைகள் தனை…நாமும்
விளங்கிடச் சொல்லி நின்றான்.
வெவ்வேறு படிகொண்ட விந்தைச் சமூகத்தின்
விருப்பு வெறுப்பும் பகிர்ந்தான்!
போராடி ஓய்ந்தோரின் புண்ணில் மருந்தாக
புதுமை சேர் கவிதை தந்து
போர் செய்த காயங்கள் ஆற்றித் திருத்தி நெய்
பூசிப் பாச் சாந்து தந்து
வேரோடிப் போய் எங்கும் புரையோடி நிற்கின்ற
விசம் வெட்ட அமுதச் சிந்து
மின்போலத் தந்து நல் வாழ்க்கையும் கூர்த்தெழ
விதைக்கிறான் பாவில் விந்து!
பாவலன் பாஷையின் காவலன்…காலத்தின்
‘பண், பாட்டை’ பாட நிற்போன்.
பாதை சமூகத்தின் பயணம் சிறந்தோங்க
பாசமாய் நீதி சொல்வோன்.
காவியம் பாடலே கடனென்றிடான்…வாழ்வின்
கனவுக்கும் நெறியுரைப்போன்.
காசுக்கு மாளாமல் கற்றுய்து ஊர் ஓங்க
கடன்செய்யும் ஏணி யாவோன்!