சொற்களை உயிர்ப்பித்தோன்

சடங்களெனக் கிடந்தன சொற்கள்
தரையெங்கும்
உடைந்து உதிர்ந்த கற்களென நொருங்கினவாம்!
பழுத்து விழுந்து சிதையும் சருகுகளாய்
அழுகி ஒழுகி அழியும் 
உடம்புகளாய்க்
கிடந்தன சொற்கள்…
கீதை சொல்லி நீவந்தாய்!
தொடர்ந்து கரத்திலுள்ள மந்திரக்கோல் தனைஆட்டி
உடலை உயிர்ப்பிக்கும்
ஒருமந்திர வாதியைப்போல்,
மந்திரங்கள் சொல்லி மறுபடியும் மறுபடியும்
தந்திரமாய்க் கற்களுக்கும்
உயிரூட்டும் பூசகர்போல்,
புனிதநீர் தெளித்துப் பொய்ப்பொருளை
மெய்ப்பொருளாய்
மனதாலே மாற்றுகிற
மார்க்க அறிஞனைப்போல்,
சொற்களைச் சுண்டிச் சுரண்டி
உயிர்க்கவைத்து
சொற்களில் பூட்டுண்ட
ஜன்னல் கதவூகளை
தட்டித் திறந்து சலசலென்று காற்றதனுள்
பட்டுத் தெறிக்கவைத்தாய்!
பரவி ஒளி அதனைத்
தொட்டு ஒளிரவைத்தாய்!
பழுதான சிலசொல்லின்
இதயநாடி வெட்டித் திறந்து அடைப்பெடுத்தாய்!
விதையான சிலசொல்லின்
‘உறக்கநிலை’ களைந்து
விழுந்து முளைக்கவைத்தாய்!
விஞ்ஞானி போல்முயற்சி
பலசெய்து பாட்டத்தில் படுத்து
முதுமையேறி
நலிந்திருந்த சொற்களுக்கு
நல்லிரத்தம் பாய்ச்சிவிட்டு
இள ஓமோன் செலுத்தி எழுந்தும் நடக்கவைத்தாய்!
வித்தைபல செய்தாய்நீ
வீரனென ஊர் புகழ
மெத்தப் பணிவாய் “யான் கவிஞன்”
என நடக்கின்றாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply