தீபாவளி(லி)

ஆடும் வரைக்கும் பேயாட்டம் ஆடிவிட்டு, 
ஆடும் வரைக்கும் 
அறம் நியாயம் மறந்துவிட்டு,
ஆடி…ஒருவன் அழிக்கவர 
அவனின்முன் 
தோற்றுவிடக் கூடாது என்று 
சுழன்று…அவன் 
கூற்றாக…
வீழ்ந்து குற்றுயிராய்த் துடிக்கையில்…செய் 
பாவம் உணர்ந்து,
பரிகாரம் கேட்டு, மெய் 
ஞானம் தெளிந்து,
அகங்காரம் விட்டு, இவ் 
ஊர்முழுதும் தீபங்கள் ஒருநூறு 
ஏற்றித் தன 
பேரை நினைவுகூரும் பெருவரத்தை 
நரகாசுரன் 
கேட்டு அழிந்தான்!
கிருஷ்ணன் வரம் தந்தான்!!
எத்தனை அசுரர்கள் இவன்போலே இன்றுவரை?
எத்தனை அரக்கர்கள் 
இவனின்பின் இவ்வுலகில்?
அத்தனை அசுரரும் அவன்போல் 
சுடலைஞானம் 
பெற்று வரம் கேட்டிருந்தால்….
பிறக்கும் நாள் ஒவ்வொன்றும் 
தீபா வளியாகத் திசைகள் ஒளிர்ந்திருக்கும்!
பாவம் நரகாசுரன்:
அவன் மட்டும் திருந்திய…இந் 
நாளில் அவனையெண்ணித் தீபங்கள் 
பரிகசித்தா 
தாம் தம்முள் நகைக்கும்?
வருடத்தில் மீதிநாட்கள் 
ஏனிருளும் அசுரர்களால் என்றுகேட்டா 
அவை அணையும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply