பௌர்ணமி அழைப்பு

வானத்தில் வெள்ளிக் குடமாக வட்டநிலா!
வானக் குடத்தால் வழிந்து
எண் திசையும்
பாயும் அமுதம்போற் பரவும் நிலவின்ஒளி!
நிலவு விளக் கொளிர,
நின்ற இருள் கலைய,
அலைபொங்கி ஆர்ப்பரிக்க,
அயல் வெள்ளை மணற்பரப்பில்
காற்றுக் கவரிவீச, கவிதைபாடும் பௌர்ணமி இரா!
பாட்டோடு கூத்தும், பலமாய் உடுக்கடியும்,
ஆடும் நடன அபிநயமும்,
உயிர் உசுப்பும்
கோயில் மணியின் குரலும்,
இனிமையினை…
ஊதுகிற மூச்சாலே
ஊர்த்திசையை வருடிஊட்டும்
நாத சுரமும்,
நாடி நரம்பைச் சிலிர்க்கவைக்கும்
சந்தக் கவியும்,
சகலரையும் மயங்கவைக்கும் 
மந்திரமாய் மாற…..
மனம் இலவம் பஞ்சாகிக்
கற்பனையிற் ஊற….கரைந்தழியும் காலத்தைப்
பற்றிக் கணக்கெடாமல்
பயணிப்போம் நினைவுவானில்!
பௌர்ணமிப் பால் பழத்தோடு
நிலாச்சோறு உண்டயர்வோம்!
ஒவ்வொரு வராக உறவு உருத்துவந்து
கூடிக் கதைபறைவோம்! குதூகலிப்போம்!
இரவிரவாய்
தாய்நிலவு தாலாட்ட முற்றத்தில் பாய்விரிப்போம்!
ஏன்எதற்கு என்று கேட்க எவருமற்று…
ஏதும் பயம் அச்சம் அற்று
எதும் ஐயமற்று….
வாழ்வின் சுதந்திரத்தின் 
வாசத்தைநாம் நுகர்வோம்!
காலங்கள் மாறிடினும், கோலங்கள் மாறிடினும்,
வாழ்க்கை முறைமை…வசதி வரம் தரினும்,
நாகரிகம் நவீனம் நன்மைகள் நல்கிடினும்,
ஏகாந்தப் பௌர்ணமியின்
இதத்தில் நனைந்தபடி…
தேனிசையைக் கேட்டபடி…
கலையில் திளைத்தந்தப் 
போதையில் மிதந்தபடி…புலன்கள் உயிர்த்தபடி…
போகும் கழியும் பொழுதுக்கு ஈடில்லை
தானென்றோம்!
நிலவு தொட்டுத் தமிழ்சுவைப்போம்!
மாதத்தில்
ஓர்நாள் எமைமுழுதாய் ஒளியூட்டி மின்னேற்றும்
ஞான நிலவின்கீழ் ‘நமையறிவோம்!’
அழைக்கின்றேன்.!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply