மண்ணில் நல்ல வண்ணம் நாம் வாழலாம்.
மனமிருப்பின்…நாம் வெற்றியின் மாலைகள்
எண்ணுக் கணக்கற்றெம் தோள் சேர்த்தும் ஆடலாம்.
எண்ணம் போல நாம் வாகைகள் சூடலாம்.
விண்ணின் சுவர்க்கத்தை வீதிக் கிறக்கலாம்.
வெற்றி கொள்ளலாம்…நாமொன்றாய் நிற்கில்…நம்
புண்ணை மாற்றலாம். பொலிவைப் பெருக்கலாம்.
புன்னகை நிதம் பூத்தெழச் செய்யலாம்!
நேற்று என்பது நீறியே போனது.
நீளும் நாளை என்னாகும் யார் கண்டது?
காற்றைக் குடித்துக் கழியும் கணம் இதே
கண்முன் உள்ள யதார்த்தம்…நிஜமிது!
ஏற்றுக் கொண்ட இவ் வாழ்விலே இன்பங்கள்
இன்று எப்படிக் காண்பது? நம்மிடை
வேற்றுமை(க்) களை வீழ்த்தினால் போதும் காண்
வெற்றி வாழ்க்கை கைக்கெட்டும் கனியது!
சேர சோழர்கள் பாண்டியர் நாளிலும்,
தெளிவு, அறிவு, உண்மை தேர்ந்த முன் நாளிலும்,
போரின் தேர்ச்சில்லுள் சிக்கிய போதிலும்,
புனர்ஜென்மம் பெற்று வந்த பொழுதிலும்,
ஊர் உரம் பெற்ற நேற்றும் .., ஒருபதில்
உரக்கவே கேட்க வேண்டிய இன்றும்…,நாம்
வேறு பட்டே கிடப்போம்….’பரவணி
வினையை’ எக்கவி யாலே திருத்துவோம்?
இரண்டு அடிகளால் இந்தப் ‘பால் வீதிக்கே’
இது அறம் பொருள் இன்பமென் றோதிய
திருக்குறள் கற்றும்; தொல்காப்பியம் எனும்
திறம் இலக்கண நூலைப் பல்லாயிரம்
வருச மாகப் பயின்றும்; நாம் ஐம்பெரும்
வலிய காப்பியம் தேர்ந்தும்; நம் கம்பனின்
பெருஞ் சுவைதுய்த்தும்; பிறவிக் குணம் விடோம்!
பிரிந்து நின்றதால் தானே பின் நிற்கிறோம்!
அழுது தோன்றிய ஆறுகள் வற்றவும்,
அகத்தின் காயங்கள் அநேகமாய் ஆறவும்,
பழுது பட்ட நம் பாகங்கள் மாற்றவும்,
பண்ணும் பரதமும் மீள் முடி சூடவும்,
கழுதையான நம் முயற்சி….குதிரையாய்க்
காற்றில் பாயவும், வெற்றிக் கவிதைகள்
விழுதெறிந்து கூத்தாடவே நம்குல
விருட்சம் ஓங்கவும்… ஒற்றுமை கொள்வமா?