ஒருநாளதிகாரம்

ஐந்து வருடத்துக் கொருதரம் 
ஓர்நாள் மட்டும் 
வாக்கெடுப்பு நிலையம்தான் நீதிமன்றம்!
அரசசேவை
யாளர்தான் நீதிமன்றப் பணியாளர்!
கட்சிகள்தான் 
வாதாடும் வக்கீல்கள்!
ஏங்கிநிற்கும் வேட்பாளர் 
தாம் கூண்டில் நிற்பவர்கள்!
பார்வையாளர் பணிவுகாட்ட…. 
மக்கள் அனைவரும்தான் நீதவான்கள்!
அவரணியும் 
நீதியாடை கைவிரல் அடையாளம்!
மக்களின் 
நேற்றை அனுபவம்தான் 
சட்டச் சரத்துக்கள்!
போடுகிற புள்ளடியே 
தீர்ப்பெழுதும் பேனாக்கள்!
“யார்க்கு விடுதலை யார்க்குச் சிறை” என்னும் 
வாக்கு…
ஒவ்வொருத்தர் வாக்குத்தான்…. 
நிர்ணயிக்கும் 
நீதிமன்றத் தீர்ப்பு!
மீதி ஐந்து ஆண்டுமட்டும் 
மாறும் அனைத்தும்….
இது ஜனநாயகப் பண்பு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply