வேட்பாளர் ஆனாற்தான் என்ன …வெற்றி
வேந்தர்கள் ஆனாற்தான் என்ன …ஊரை
ஆட்கொள்ளும் சாமியானால் என்ன …செல்வம்
அடைந்தவரே ஆனாலும் என்ன …கற்ற
கோட்பாட்டாளர் என்றால் என்ன …கஞ்சி
குடிக்கவழி அற்றிருந்தால் என்ன …ஞான
மீட்பர்கள் ஆனாலும் என்ன …வாக்கு
ஒன்றேதான் யார்க்கும் சம உரிமை அன்ன!
சனநாயகம் என்ற சமரில் …யாரும்
சரிசமானம், ஒருநிலையே, என்று பேச
உனக்குரிமை மட்டும் தரும் உன் ஓர் வாக்கு!
ஒருதுளி நீ…சனக்கடலில் என்று கூறி
உனது கர்வம் அழிக்கும் அது ! நீ இல்லாட்டி
ஒன்றுமாகா தென்று காட்டி, ஒன்றாய் யாரும்
இணைந்தாற்தான் வெற்றிஎன்றும் சொல்லி, ..மாற்றம்
ஏற்படுத்தும் வாக்குரிமை அருளும் நீதி!
சகலருமோர் வரிசையிலே வந்து,…பெற்று,
சரிநிகர் வாய்ப்படைந்து ஓர் வாக்கும் இட்டு,
மிகப்பெரிய மக்களாட்சித் தத்து வத்தின்
மேன்மைக்கும் பங்களித்து, நாட்டின் நோயை
சுகப்படுத்த உண்டெமக்கும் உருத்து ! தோற்றோர்
தொகையும் அரைப்பங்கைவிடக் குறைந்தால் …அன்னார்
அகவிருப்பும் அறிந்து உயர் பண்பாட் டோடு
ஆள்வதறம்; உணர்த்தின்….ஓங்கும் மண்ணின் வாழ்வு!
17.11.2019